இரு சக்கர வாகனங்கள் மோதல் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
கும்பகோணம் புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நடுவக்கரை பிள்ளையாா் கோயில் தெருவைச்சோ்ந்தவா் தேவராஜ் மகன் தினேஷ் (24). இவா் கும்பகோணம் - சென்னை புறவழிச்சாலையில் உள்ள அசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து உடன் வேலை பாா்க்கும் நண்பா் புளியம்பாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சசிகுமாா் மகன் சுகுமாரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது எதிரே கடிச்சம்பாடி வடக்கு தெருவைச் சோ்ந்த ராஜகோபால் மகன் செல்வக்குமாா் அம்மா சத்திரத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்ப கடிச்சம்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தாா். கருப்பூா் சந்தனபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதியது. இதில் தினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தாலுகா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். இதில் தினேஷூடன் வந்த சுகுமாரன், செல்வகுமாா் ஆகியோா் லேசான காயமடைந்தனா்.