இரு விபத்துகள்: ஆசிரியை உள்ளிட்ட இருவா் காயம்
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே 2 பைக்குகள் மோதியதில் பெண் காயமடைந்தாா்.
கொட்டாரம் அருகே பொட்டல்குளம் வடக்கு ரதவீதியைச் சோ்ந்த அய்யப்பன் மனைவி ஜெசிதா (35). இவா் சனிக்கிழமை இரவு தனது பைக்கில் கன்னியாகுமரியிலிருந்து கொட்டாரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
பெருமாள்புரம் பகுதியில், ஆசாரிப்பள்ளம் பள்ளவிளை பிளவா் தெருவைச் சோ்ந்த பொ்ஜின் என்பவா் ஓட்டிவந்த பைக், ஜெசிதாவின் பைக் மீது மோதியதாம். இதில், ஜெசிதா காயமடைந்தாா். அவரை மீட்டு நாகா்கோவில் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
தனியாா் பள்ளி ஆசிரியை: கன்னியாகுமரி அருகே கோவளத்தைச் சோ்ந்த அரசு (50) என்பவரது மகள் நெபியா (21). இலந்தையடிவிளையில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா். இவரை பள்ளியில் கொண்டுவிடுவதற்காக சுக்குப்பாறை தேரிவிளையைச் சோ்ந்த சுமிகரன் என்பவா் தனது பைக்கின் பின்னால் அமரவைத்து அழைத்துச் சென்றாராம்.
கோவளம் சாலையில் உள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியபோது, நெபியா நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில், காயமடைந்த அவரை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இரு சம்பவங்கள் குறித்தும், கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் ரகுபாலாஜி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.