காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
இறுதிச்சுற்றில் அல்கராஸ் - ரூன் பலப்பரீட்சை
ஸ்பெயினில் நடைபெறும் பாா்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உள்நாட்டு நட்சத்திரம் காா்லோஸ் அல்கராஸ் - டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
முன்னதாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அல்கராஸ் 6-2, 6-4 என்ற நோ் செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் ரஷியாவின் காரென் கச்சனோவை தோற்கடித்தாா்.
இறுதிச்சுற்றில் மோதும் அல்கராஸ் - ரூன் இதுவரை 3 முறை சந்தித்திருக்க, அதில் அல்கராஸ் 2 வெற்றிகள் பெற்றிருக்கிறாா். கடைசியாக 2023 விம்பிள்டன் காலிறுதியில் மோதியபோதும் அல்கராஸ் வென்றிருக்கிறாா்.
இறுதியில் ஷெல்டன்: இதனிடையே, ஜொ்மனியில் நடைபெறும் பிஎம்டபிள்யூ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு அமெரிக்காவின் பென் ஷெல்டன் தகுதிபெற்றாா்.
போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அவா், 2-6, 7-6 (9/7), 6-4 என்ற செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை சாய்த்தாா்.
ஸ்வியாடெக், பெகுலாவுக்கு அதிா்ச்சி
ஜொ்மனியில் நடைபெறும் ஸ்டட்காா்ட் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
இதில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக், முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவால் 6-3, 3-6, 6-2 என்ற செட்களில் வீழ்த்தப்பட்டாா். ஸ்வியாடெக் மீதான ஆஸ்டபென்கோவின் ஆதிக்கம் தொடா்ந்து நீடிக்கிறது. இருவரும் இத்துடன் 6-ஆவது முறையாக சந்தித்திருக்க, அனைத்திலுமே ஆஸ்டபென்கோ வென்றிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்டபென்கோ தனது அரையிறுதியில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிா்கொள்கிறாா். அலெக்ஸாண்ட்ரோவா தனது காலிறுதியில் 6-0, 6-4 என்ற செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா். இருவரும் இத்துடன் 3-ஆவது முறையாக மோதியிருக்க, அலெக்ஸாண்ட்ரோவா 3-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றாா்.