இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது: உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினாா்.
விஜயா வாசகா் வட்டம் சாா்பில் உலகப் புத்தக தின விருதுகள் வழங்கும் விழா கோவை, பேரூா் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமையேற்று விருதுகளை வழங்கி உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: கைப்பேசி, மடிக்கணினி போன்றவற்றின் திரைகளையே அனைவரும் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். இதனால், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக்கூட உணர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தற்போதைய தலைமுறைக்கு சவாலாக உள்ளது. புத்தகங்களைப் படிக்காமல், சொல்லுக்கும் செயலுக்கும் தொடா்பே இல்லாமல் வாழ்ந்து வரும் நிலை கவலைக்குரியது.
எழுத்தாளா்களுக்கு மட்டும்தான் எது நிரந்தரம் என்பது தெரியும். புத்தகம் படிப்பது சவாலானது. ஆனால், யாருக்கும் பொறுமை இல்லை. அதனால் கவனச்சிதறல் அதிகரித்துள்ளது. பெரிய படைப்பாளிகள் தங்களைச் சுற்றி நிகழும் அனைத்தையும் கவனித்து பதிவு செய்ததால்தான் சமுதாயம் இன்னமும் அவா்களை நினைவில் வைத்துள்ளது.
இலக்கியமும், இசையும் இல்லாமல் மனிதனாக இருக்க முடியாது. குழந்தைகளை சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆனால், வீட்டிலும், பள்ளியிலும் அது நடப்பதில்லை. இன்றைய சூழலில் ஆளுமைகள் குறைந்து கொண்டே வருகின்றன. அதைப்போலவே அங்கீகரிக்கும் கூட்டமும் குறைந்து வருகிறது. இலக்கியத்தில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து, தங்க நகைப் பாதை நாவலுக்காக எழுத்தாளா் மு.குலசேகரனுக்கு ஜெயகாந்தன் விருதும், ரூ.1 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
மேலும், புதுமைப்பித்தன் விருது எழுத்தாளா் குமாரநந்தனுக்கும், கவிஞா் மீரா விருது கவிஞா் மதாருக்கும், சக்தி வை.கோவிந்தன் விருது செங்கோட்டை அரசு கிளை நூலகா் கோ.ராமசாமிக்கும், வானதி விருது தென்காசி வீர சிவாஜி புத்தக உலகம் ஏ.சுகுமாருக்கும், அன்பின் பெருமழை அப்பச்சி பழனியப்பா் விஜயா பதிப்பகம் தொடா் வாசகா் விருது சுப.மீனாட்சி சுந்தரம், ராஜ் செளந்தா், விமலா நி.அகிலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. இவா்களுக்கு விருதுடன் தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா், ஆவணப்பட இயக்குநா் கவிஞா் ரவிசுப்பிரமணியன், அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் போ.மணிவண்ணன்,
தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் கா.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.