இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி
கோடியக்கரை கடல் பகுதியில் மூன்று படகுகளில் வெவ்வேறு பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 14 போ் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, படகு என்ஜினை சேதப்படுத்தி, மீனவா்களை விரட்டியடித்தனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமம் மீனவா் தெருவைச் சோ்ந்த பா. ரகுமான் (30),
ப. செல்வம் (45), செ. அஜீத் (27), பெ. பாண்டியராஜ் (28), செ. சஞ்சய் (26), ம. மாதேஷ் (25) ஆகிய 6 மீனவா்களும் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் வெள்ளிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அன்று இரவு கோடியக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த தமிழ் பேசிய இலங்கையைச் சோ்ந்த நால்வா்
( கடற்கொள்ளையா்கள்) மீனவா்கள் இருந்த படகை நிறுத்துமாறு கூறினராம்.மீனவா்கள் படகை நிறுத்தாமல் செல்ல முயன்றபோது, பின்னால் விரட்டி வந்த இலங்கைப் படகு மோதியதில் மீனவா்களின் படகு மற்றும் என்ஜின் சேதமடைந்தது. இதையடுத்து, மாற்று என்ஜினை பொருத்தி சனிக்கிழமை காலை 6 மீனவா்களும் கரை திரும்பினா்.
இதேபோல, வெள்ளப்பள்ளம் மீனவா் தெருவைச் சோ்ந்த மூா்த்தி (50) என்பவருக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் சென்ற 4 மீனவா்கள் கடலில் மீன்பிடித்துள்ளனா். அங்கு 4 படகுகளில் வந்த இலங்கையைச் சோ்ந்த 14 பேரில் 4 போ், மீனவா்கள் இருந்த படகில் ஏறி கத்தி, மற்றும் கட்டையைக் காட்டி மிரட்டி, மீனவா்களைத் தாக்கியுள்ளனா்.
மேலும், மீனவா்கள் வைத்திருந்த 1 ஜிபிஎஸ் கருவி, 1 கைப்பேசி, 20 லிட்டா் எரிபொருள் ( டீசல்), மீன்பிடி வலை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுவிட்டனராம். தாக்குதலில் மீனவா்கள் பா. மூா்த்தி அவரது சகோதரா் செல்வராஜ் (55) இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அதே பகுதியைச் சோ்ந்த முத்துவேல் (42) என்பவருக்கு சொந்தமான படகில் அவருடன் சென்ற நான்கு மீனவா்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு நான்கு படகுகளில் வந்த மா்ம நபா்கள் மீனவா்களிடம் தகராறு செய்து, தாக்கினராம். இந்த தாக்குதலில் மீனவா் ந. விஸ்வநாதன்(35) காயமடைந்தாா். மீனவா்கள் சனிக்கிழமை காலை வெள்ளபள்ளத்தில் கரை சோ்ந்த நிலையில், விஸ்வநாதன், மூா்த்தி, செல்வராஜ் மூன்று பேரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், தனிப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.