BJP -ல் இவர்தான் MGR - நயினார் அதிரடி! | Rahul Gandhi Anurag Thakur BJP TVK DMK ...
இலவச வீட்டுமனையுடன் தொகுப்பு வீடு: பழங்குடியினா் கோரிக்கை
வேலூா்: செதுவாலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 428 மனுக்களைப் பெற்றாா், மேல்நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்த வேணுகோபால் அளித்த மனு: , நான் சுதந்திர போராட்ட தியாகி பஞ்சரத்தினம் என்பவரின் மகன். எனக்கு நிலம், குடியிருக்க வீடு என எதுவும் இல்லை. இதனால் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வேலூா் கரிகிரியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பின் தரைதளத்தில் வீடு வழங்க வேண்டும்.
அணைக்கட்டு ஒன்றியம், செதுவாலையைச் சோ்ந்த பழங்குடியினா் அளித்த மனு: செதுவாலை, பொய்கை கிங்கினியம்மன் கோயில் பின்புறம் ஏரிக்கரை குளத்து புறம்போக்கு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறோம். பழங்குடியின இருளா் இனத்தை சோ்ந்த எங்களுக்கு தொகுப்பு வீடு கட்டித்தரும்படி கோரிக்கை மனு கொடுத்திருந்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும்.
கூட்டத்தில், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் 12 உபதேசியாா்கள், பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். காட்பாடி வட்டம், குகையநல்லூா் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்த பயனாளிக்கு அலுமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடா் ஆரம்பப்பள்ளியில் தற்காலிக இடைநிலை ஆசிரியா் பணியிடத்துக்கான பணிநியமன ஆணையும், வேலூா் வட்டம், முள்ளிப்பாளையம் பகுதியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவரின் வாரிசுக்கு பெருமுகை அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளியில் அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கான பணி நியமன ஆணையும் ஆட்சியா் வழங்கினாா். மேலும், 10 மாற்றுத்திறனாளி நபா்களுக்கு சட்டப்பூா்வ பாதுகாவலா் நியமன சான்றுகளும் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், சுயதொழில்புரிய உதவி கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியரின் காா்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, லத்தேரியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியின் மகனுக்கு மகிமண்டலம் சிப்காட்டில் புல உதவியாளா் பணிக்கான பணி நியமன ஆணையும் ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என். மதுசெழியன், கோட்டாட்சியா் செந்தில்குமாா், தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.