ஈரான்: இஸ்ரேலின் உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
ஈரான் நாட்டில் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுக்காக உளவு பார்த்தாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான மொஸாத் அமைப்பின் மூத்த உளவாளியாகக் கருதப்பட்டவர் மொஹ்சென் லங்கார்நெஷின். இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஈரானின் ராணுவ அதிகாரி கலோனெல். ஹசன் சையத் என்பவர் படுகொலைக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணையின் போது மொஹ்சென் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையானது இன்று (ஏப்.30) நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மொஹசென் கடந்த 2020-ம் ஆண்டு மொஸாத் அமைப்பினால் பணியில் சேர்க்கப்பட்டதாகவும், நேபாளம் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய புலனாய்வுத் துறை அதிகாரிகளை அவர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2022-ம் ஆண்டு ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரியான கலோனெல். ஹசன் சையத் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது அந்நாட்டில் மிகப் பெரியளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்காவில் மனைவி, மகனைக் கொன்று தற்கொலை செய்த இந்திய தொழிலதிபர்