திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் சுவாமி சிலை
திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் எடை கொண்ட பெருமாள் சிலை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற பகுதியாக விளங்கி வருகிறது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்களில் செதுக்கப்படும் சுவாமி சிலைகள் இந்தியா மட்டுமின்றி இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், திருமுருகன்பூண்டி திருமகள் சிற்பக் கலைக்கூட சிற்பி சிவகுமாாா், 3 டன் எடை, 7 அடி உயரத்தில் பெருமாள் சிலையை செதுக்கி கிருஷ்ணகிரிக்கு அனுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கம்பள்ளி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஜூன் மாதம் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்காக இந்த பெருமாள் சிலை செதுக்கப்பட்டது.
ஆதார பீடம் ஒரு அடியுடன் மொத்தம் 7. 1/4 உயரமும், 3 டன் எடையும் கொண்டது இந்த சிலை. திருவாச்சியில் சிவன், பிரம்மன், மட்சவதாரம், கூா்மாவதாரம், வராஹிவதாரம், நரசிம்மவதாரம், வாமானவதாரம், ராமானவதாரம், பலராமானவதாரம், கிருஷ்ணநவதாரம், பரசுராமாவதாரம், கல்கி அவதாரம், ஸ்ரீதேவி, பூதேவி, நாகம், சங்கு, சக்கரம், கதை, ஓம், சுவஸ்திகா என 20 சிலைகளுடன் பெருமாள் தாமரையில் நின்றதுபோல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.