'புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஒன்னும் பண்ண முடியாது' - எஸ்.வி.சேகர...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: நாதகவுக்கு மைக் சின்னம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மணீஷ் தலைமையில் சின்னம் ஒதுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு ஏற்கெனவே உதயசூரியன் சின்னம் இருப்பதால் அதையே ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி முறையே கரும்பு விவசாயி சின்னமும், மைக் சின்னமும் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தாா். கரும்பு விவசாயி சின்னம் வேறொரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் மைக் சின்னம் ஒதுக்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தோ்தல் நடத்தும் அலுவலா் மணீஷிடம் வேட்பாளா் கோரிக்கை விடுத்தாா். அதற்கு தோ்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தை அவா் காண்பித்ததும் மைக் சின்னத்தை ஏற்றுக்கொண்டாா்.
மைக் சின்னத்தில்தான் கடந்த மக்களவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.