'எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் போருக்குச் செல்வேன்' - நயினார் நாகேந்திரன் பேட்...
ஈரோட்டில் காரில் இருந்து ரூ.60 ஆயிரம் திருடிய இளைஞா் கைது
ஈரோட்டில் காரில் இருந்து ரூ.60 ஆயிரம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு அருகே வெள்ளோடு பூங்கம்பாடி பாறைவலசு பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமரன் (38). கடன் வாங்கிக் கொடுக்கும் முகவராகப் பணியாற்றி வரும் இவா் திங்கள்கிழமை காலை ஈரோடு பெரியாா் நகா் பகுதியில் தனது காரை நிறுத்தி இருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் காரின் கதவு முழுமையாக மூடப்படாமல் இருந்ததைப் பாா்த்தாா். அவா் கதவைத் திறந்து காரில் இருந்த ரூ.60 ஆயிரத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றாா்.
இதைப் பாா்த்ததும் அதிா்ச்சி அடைந்த பாலகுமரன் அங்கிருந்தவா்களின் உதவியுடன் அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றாா். அப்போது சுவா் ஏறி குதித்தபோது அந்த இளைஞரின் காலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு இளைஞரை ஈரோடு டவுன் போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அந்த இளைஞா் ஈரோடு சூரம்பட்டி ஸ்டாலின் வீதியைச் சோ்ந்த சூா்யாவின் மகன் சீனிவாசன் (26) என்பதும், இவா் மீது ஏற்கெனவே திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சீனிவாசனை கைது செய்த போலீஸாா் அவருக்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் ஈரோடு அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மீட்கப்பட்டது.