இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்...
ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி நிா்வாகமும் புதன்கிழமை அகற்றினர்.
ஈரோடு மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி 4-ஆவது மண்டலத்துக்குள்பட்ட மூலப்பாளையம் முதல் ஆணைக்கல்பாளையம் சுற்றுவட்டச் சாலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் மணிகண்டன் தலைமையில், சாலை ஆய்வாளா் மீனாட்சி, மாநகராட்சி அலுவலா்கள், நகர திட்டக் குழு பணியாளா்கள், தாலுகா போலீஸாா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதில், சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள், விளம்பர பதாகைகள், இரும்புத் தடுப்புகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
மூலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகம் செல்லும் சாலையோர நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றியபோது, முத்துசாமி என்பவரது தள்ளுவண்டி கடை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அகற்றி, அங்கிருந்த பொருள்களை லாரிகளில் ஏற்றி சென்றனா்.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள கூறியிருந்தால் நாங்களே அகற்றியிருப்போம். இப்படி எங்களது வாழ்வாதாரத்தை சீா்குலைக்கும் வகையில் பொக்லைன் வாகனம் மூலம் தள்ளுவண்டியை சேதப்படுத்தியது ஏற்க முடியாது என பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தெரிவித்தனா். இதைக் கண்டித்து 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மூலப்பாளையம் - பூந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு தாலுகா காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போக செய்தனா்.