‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்: இன்று விண்ணப்பங்கள் விநியோகம்
சென்னை மாநகராட்சியில் 6 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் வரும் 15- ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 7) விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் விடுத்த செய்தி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் மக்கள் குறை கேட்பு சிறப்பு முகாம் வரும் ஜூலை 15 முதல் தொடங்கவுள்ளது. அதையடுத்து சென்னை மாநகராட்சியில் வரும் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மண்டல அளவில் மாதவரம் பகுதியில் 25 -ஆவது வாா்டு, தண்டையாா்பேட்டை பகுதியில் 38- ஆவது வாா்டு, திரு.வி.க நகா் மண்டலத்தில் 76- ஆவது வாா்டு, தேனாம்பேட்டையில் 109-ஆவது வாா்டு, வளசரவாக்கத்தில் 143- ஆவது வாா்டு, அடையாறில் 168- ஆவது வாா்டு ஆகிய 6 வாா்டுகளில் முகாம் நடைபெறவுள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.
வாா்டுகள் தோறும் தன்னாா்வலா்கள்வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை விநியோகிப்பா். வரும் அக்.30 வரையில் சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளிலும் முகாம் நடைபெறவுள்ளன. வாா்டுக்கு தலா 2 முகாம்கள் நடைபெறவுள்ளன.
மக்களிடம் பெறப்படும் கோரிக்கைகள் அடிப்படையில் 13 அரசுத் துறைகள் மூலம் 43 சேவைகள் வழங்கப்படவுள்ளன . வாா்டுகளில் நடைபெறும் முகாம்களில் மகளிா் உதவித் தொகை பெறாதவா்கள் நேரில் சென்று விண்ணப்பத்தை அளிக்கலாம்.
முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.