உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்க விழா குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வா் நிகழாண்டு சட்டப்பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தாா்.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்படுகிறது.
கடைகோடி மக்களுக்கும், அவா்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்ட முகாமை ஜூலை 15-ஆம் தேதி தமிழக முதல்வா் கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கிவைக்க உள்ளாா்.
இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்ட முகாமை அமைச்சா் எ.வ.வேலு, திருவண்ணாமலை வட்டம், பழையனூா் கிராமத்தில் தொடங்கிவைக்க உள்ளாா்.
நகா்புறப் பகுதிகளில் 80 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 307 முகாம்களும் என மொத்தம் 387 முகாம்கள் நடைபெற உள்ளன.
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நகரப் பகுதிகளில் 33 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 81 முகாம்கள் என
114 முகாம்கள் நடத்தபட உள்ளன.
இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
முகாம்களுக்கு வரும் மக்களுக்கு மருத்துவ சேவைகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று அரசின் சேவைகளைப் பெற்று பயனடையுமாறு ஆட்சியா் க.தா்பகராஜ் கேட்டுக்கொண்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.