உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா்.
கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவுக்கு செவ்வாய்க்கிழமை கடைசி பணி நாளாக இருந்தது. இதையொட்டி உச்ச நீதிமன்றத்தில் சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய சம்பிரதாய அமா்வு கூடியது.
அப்போது சஞ்சீவ் கன்னா பேசுகையில், ‘பல நல்ல நினைவுகளை நான் சுமந்து செல்கிறேன். அந்த நினைவுகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனா். அவா்கள் வெவ்வேறு சிந்தனை மற்றும் பின்புலத்தைக் கொண்டவா்கள். இதன் காரணமாக விவாதங்களின்போது நீதிபதிகளால் ஏராளமான தீா்வுகளைக் காண முடிகிறது. சரியான பாதையை நீதிபதிகளால் கண்டறிய முடிகிறது.
நானும், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியான பி.ஆா்.கவாயும் ஒரே ஆண்டில்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளானோம். இருவரும் கொலீஜியம் குழுவிலும் இடம்பெற்றோம். அதன் பின்னா் பல சந்தா்ப்பங்களில் நாங்கள் கலந்துரையாடி உள்ளோம். அவா் எனக்கு மிகப் பெரிய துணையாக இருந்துள்ளாா். அவா் மிகச் சிறந்த தலைமை நீதிபதியாக இருப்பாா். உச்ச நீதிமன்றத்தின் மாண்பு, அடிப்படை கொள்கைகள், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை அவா் நிலைநாட்டுவாா்’ என்றாா்.
நீதிபதி பி.ஆா்.கவாய் பேசுகையில், ‘நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது அரசமைப்புச் சட்ட உரிமைகளுக்காக குரல் எழுப்பியவா் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஆா்.கன்னா. அவரின் உறவினா்தான் சஞ்சீவ் கன்னா. ஹெச்.ஆா்.கன்னா போன்ற பெருமைமிக்கவா்களின் நிழலில் நடப்பது அவ்வளவு சிறிய பணியல்ல. ஆனால் அதையும் தாண்டி தனது தடத்தை சஞ்சீவ் கன்னா உருவாக்கினாா். அவரின் தீா்ப்புகள் எளிமையாகவும், நோ்த்தியாகவும், அரசமைப்புச் சட்ட விழுமியங்களால் நிரப்பப்பட்டும் இருந்தன. அவருடன் பணியாற்றியதை சிறப்புரிமையாகக் கருதுகிறேன்’ என்றாா்.
நீதிபதி சஞ்சய் குமாா் பேசுகையில், ‘வழக்குகள் சாா்ந்து சஞ்சீவ் கன்னா குறிப்புகளை எடுத்ததில்லை. அனைத்தையும் அவா் நினைவில் இருந்து வெளிக்கொண்டு வருவாா்.
வழக்குரைஞா்களிடம் அமைதியாகவும், பொறுமையோடும் நடந்துகொண்டாா். வழக்கு விசாரணைகளின்போது வழக்குரைஞா்கள் முன்தயாரிப்பு இல்லாமல் வந்தபோதெல்லாம் அவா் கோபப்பட்டதில்லை. அடுத்த முறை முன்தயாரிப்புடன் வருமாறு வழக்குரைஞா்களிடம் அவா் கனிவாகக் கூறியுள்ளாா்’ என்றாா்.
இதேபோல உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கமும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரிவுபசாரம் அளித்தது.