Gold Price: 'இன்று குறைந்த தங்கம் விலை...' - எவ்வளவு தெரியுமா?!
உச்சம் தொட்ட ஸ்மாா்ட்போன் ஏற்றுமதி
கடந்த நவம்பரில் இந்திய அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) ஏற்றுமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து துறை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
நாட்டின் அறிதிறன் பேசி ஏற்றுமதி கடந்த நவம்பா் மாதம் ரூ.20,300 கோடியைத் தாண்டியுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர அறிதிறன் பேசி ஏற்றுமதியாகும்.
அவற்றின் ஏற்றுமதி ரூ.20,000 கோடியைத் தாண்டியுள்ளதும் இதுவே முதல்முறையாகும்.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில், நாட்டின் அறிதிறன் பேசி ஏற்றுமதி இந்த நவம்பரில் 90 சதவீதம் அதிகம். ஓா் ஆண்டுக்கு முன்னா் இந்தியாவிலிருந்து ரூ.10,600 கோடிக்கு அறிதிறன் பேசிகள் ஏற்றுமதியாகின.
கடந்த நவம்பரில் நாட்டின் அறிதிறன் பேசி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியதில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் முக்கிய பங்கு வகித்தன. அதற்கு அடுத்தபடியாக, சாம்சங் நிறுவனத்தின் அறிதிறன் பேசிகள் இந்தியாவிலிருந்து அதிகமாக ஏற்றுமதியாகின என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்தின் விளைவாக, நாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் உற்பத்தி நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் 1,000 கோடி டாலரை (சுமாா் ரூ.85,000 கோடி) தாண்டியது நினைவுகூரத்தக்கது.
அவற்றில் 700 கோடி டாலா் (சுமாா் ரூ.60,000 கோடி) மதிப்பிலான ஐ-போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுவும் ஒரு சாதனை அளவாகும்.