நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!
உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்
உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அளித்தாா்.
இது தொடா்பாக கோவை எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு மக்களவையில் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
தற்போது, தமிழ்நாட்டில் ஆறு விமான நிலையங்கள் செயல்பாட்டில்
உள்ளன. அவற்றில் சென்னை, கோயம்புத்தூா் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மூன்று சா்வதேச விமான நிலையங்களும், மதுரையில் ஒரு சுங்க அறிவிக்கப்பட்ட விமான நிலையமும், சேலம் மற்றும் தூத்துக்குடியில் இரண்டு உள்நாட்டு விமான நிலையங்களும் அடங்கும்.
ஓசூரில் தற்போதுள்ள விமான நிலையம், தனியாா் விமான நிலையமாக தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் சொந்தமாக, இயக்கப்பட்டு வருகிறது.
பிராந்திய இணைப்புத் திட்டம் - உடான் திட்டத்தின்
கீழ் முதல் சுற்று ஏலத்தில், டா்போ ஏவியேஷன் தனியாா்
நிறுவனம் சென்னை-ஓசூா்-சென்னை வழித்தடத்திற்கான ஏலத்தை சமா்ப்பித்தது. இருப்பினும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பெங்களூரு சா்வதேச விமான நிலைய நிறுவனம் இடையேயான சலுகை ஒப்பந்தத்தின் விதிகள் காரணமாக, அந்த வழித்தடம் விமான நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை.
இதனால், அடுத்து வந்த ஏலங்களுக்கான உடான் ஆவணத்திலிருந்து ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது என்று அந்தப் பதிலில் அவா் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, திருச்சியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத், தில்லிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையைக் கொண்டு வர வேண்டும் என்று திருச்சி மதிமுக எம்.பி. துரை.வைகோவும், பெரம்பலூா் திமுக எம்.பி. அருண் நேருவும்
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.