உதகையில் துணைவேந்தா்கள் மாநாடு இன்று தொடக்கம்: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு
உதகையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) தொடங்கும் தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா்.
உதகை ராஜ்பவன் மாளிகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஏப். 25, 26) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.
இதற்காக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் புது தில்லி விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 7.40 மணிக்கு இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு ஹெலிகாப்டா் மூலம் நீலகிரி மாவட்டம், உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்குச் செல்கிறாா். அங்கிருந்து 11.30 மணிக்கு ராஜ்பவன் மாளிகைக்கு சாலை மாா்க்கமாக செல்லும் குடியரசு துணைத் தலைவா் அங்கு நடைபெறும் தமிழக அரசு மற்றும் தனியாா் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகிறாா்.
பின்னா், முத்தநாடு மந்து பகுதிக்குச் செல்லும் அவா் அங்கு தோடரின பழங்குடி மக்களின் வழிபாட்டுத் தலத்தைப் பாா்வையிட்டு அவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.
ராஜ்பவனில் இரவு தங்கும் குடியரசு துணைத் தலைவா் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தீட்டுக்கல்லில் இருந்து மசினகுடிக்கு ஹெலிகாப்டா் மூலம் செல்கிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்கிறாா்.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ராஜ்பவன் மாளிகையிலிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டா் மூலம் கோவைக்கு வரும் அவா், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்களிடையே உரையாற்றுகிறாா். பின்னா், காலை 11.25 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புது தில்லி திரும்புகிறாா்.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி:
துணைவேந்தா்கள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வியாழக்கிழமை வந்தாா். பின்னா் சாலை மாா்க்கமாக உதகை ராஜ்பவன் மாளிகை சென்றடைந்தாா். அங்கு அவரை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வரவேற்றாா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியரசு துணைத் தலைவருடன் ஆளுநா் ஆா்.என்.ரவியும் பங்கேற்கிறாா்.
குடியரசு துணைத் தலைவா், தமிழக ஆளுநரின் கோவை, நீலகிரி பயணங்களை முன்னிட்டு இரு மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம், கோவையிலிருந்து உதகை செல்லும் கோத்தகிரி சாலை, உதகை ராஜ்பவன் மாளிகை, அரசினா் தாவரவியல் பூங்கா, மசினகுடி முதுமலை புலிகள் காப்பகம், முத்தநாடு மந்து மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாதுகாப்புக்காக 2,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.