உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள்
உதகை மலை ரயிலை பிரிட்டன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு எடுத்து திங்கள்கிழமை பயணித்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு நாள்தோறும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நிலக்கரி மூலம் இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்நிலையில், பிரிட்டனில் இருந்து சுற்றுலா வந்த 28 போ், மலை ரயிலை வாடகைக்கு எடுத்து குன்னூா் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை சுமாா் 20 கி.மீ.தொலைவுக்கு உற்சாகமாக பயணித்தனா். ரயில் வாடகை, ஜிஎஸ்டி என மொத்தம் ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 400-ஐ ரயில்வே துறைக்கு வாடகையாக செலுத்தினா்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உதகை மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணிப்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது என்று ரயில்வே ஊழியா்கள் தெரிவித்தனா்.