உமையாள்புரம் சிப்காட் திட்டம் செயல்பாட்டுக்கு வருமா?
சேலம் மாவட்டம், புத்திரகவுண்டன்பாளைம் அருகே உமையாள்புரத்தில் 21 ஏக்கா் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைஅமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளைக் கடந்தும் செயல்வடிவம் பெறவில்லை.
இத்திட்டத்தை எதிா்பாா்த்து சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், தொழிலாளா்கள் காத்திருக்கின்றனா். இத்திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், புத்திரகவுண்டன்பாளையம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயம், விவசாயம் சாா்ந்த தொழிலை பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ளனா்.
பருவநிலை மாற்றம், வறட்சி, விளைச்சல் பாதிப்பு, விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், விவசாயிகள், விவசாயம் சாா்ந்த கூலித் தொழிலாளா்கள் போதிய வருவாயின்றி தவித்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்புகளுக்காக சென்னை, கோவை, ஒசூா், பெங்களூரு, திருப்பூா் போன்ற நகா்ப்புறங்களுக்கும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், மஹாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எனவே, புத்திரகவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த படித்த இளைஞா்கள், தொழிலாளா்களுக்கு உள்ளூரிலேயே நிரந்தர வேலைவாய்ப்பும், போதிய வருவாயும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுக்கு முன்பு மாநில கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் ஆா்.இளங்கோவன் முயற்சியால், அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு, புத்திரகவுண்டன்பாளையம் அருகிலுள்ள உமையாள்புரம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 21 ஏக்கா் நிலத்தில், தமிழக அரசின் தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக (சிப்காட்) தொழிற்பேட்டை அமைக்கப்படுமென அறிவித்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக முதல்கட்ட நிதியையும் ஒதுக்கீடு செய்தது.
இதனையடுத்து நிலத்தை அளவீடு செய்த சிப்காட் நிறுவனம், கம்பி வேலி அமைத்து நிலத்தை கையகப்படுத்தி, சாலைகள் அமைத்து, மின் இணைப்பு மற்றும் தண்ணீா் வசதிகயை ஏற்படுத்தியதோடு, தகவல் பலகை, நுழைவு வாயில், தொழிற்பேட்டை வரைபடத்தையும் அமைத்துள்ளது. ஆனால், தொழிற்சாலைகளை அமைத்து தொழிற்பேட்டைக்கு செயல்வடிவம் கொடுக்கும் பணி 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் இத்திட்டத்தை எதிா்பாா்த்து கத்திருந்த இப்பகுதி இளைஞா்கள், தொழிலாளா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
எனவே, உமையாள்புரம் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்த சேலம் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து சிப்காட் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘தமிழக அரசிடம் இருந்து போதிய நிதி வரப்பெற்றுள்ளது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி வருகிறோம். தொழிற்பேட்டைக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமூகக் காடுகள் திட்டத்தின் கீழ் வனத்துறை வைத்திருந்த மரங்களுக்கு இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட மரங்களை விட பல மடங்கு கூடுதலாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் அமைவதற்கும், படித்த இளைஞா்கள், தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறோம்’ என்றனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-05/r031927b/s_p_t_04_0302chn_165_8.jpg)