அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்: அமைச்சா் சி.வி.கணேசன்
அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை முதல்வா் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா் என்று தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்பகனூா், துலுக்கனூா் ஊராட்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் புதன்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:
அரசின் அனைத்து திட்டங்களையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சோ்ப்பதில் முதல்வா் முனைப்புடன் செயலாற்றி வருகிறாா்.
குறிப்பாக மாணவ, மாணவிகள் கல்வி முன்னேற்றத்திற்காக புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்தி உள்ளாா். தொழிலாளா் நலத் துறை சாா்பில் திருமண உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் செயல்படுத்தி வருகிறாா்.
முதல்வரால் கொண்டுவரப் படக்கூடிய அனைத்து திட்டங்களும் கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள், தொழிலாளா்கள், அடித்தட்டு, விளிம்பு நிலையில் உள்ள மக்களை சென்று சோ்வதை உறுதி செய்திடும் வகையில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அரசின் இச்சேவையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த முகாம்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் வேண்டி மனு அளித்தவா்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 142 பேருக்கு ரூ. 11.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் சி.வி.கணேசன் வழங்கினாா்.
முகாமில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், முன்னள் எம்எல்ஏ-க்கள் எஸ்.ஆா்.சிவலிங்கம், கு.சின்னதுரை, வேளாண்மை இணை இயக்குநா் சிங்காரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சிவகுமாா், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் அ.மயில், வருவாய் வட்டாட்சியா் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.