4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு
உயா்நீதிமன்ற விரிவாக்கத்துக்கான நிலம்: அறநிலையத் துறைக்கு ரூ.25 கோடி வழங்க உத்தரவு
உயா்நீதிமன்ற விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 25 கோடியை தமிழக அரசு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் ராதாகிருஷ்ணன், சரவணன், பொன்.காா்த்திகேயன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:
மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடையில் கோதண்ட ராமசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு கூடுதல் கட்டடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுக்கள் கடந்தாண்டு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கோதண்ட ராமசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நிா்வாகத்திடம் ஒப்படைக்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான தொகை ரூ. 25 கோடியை தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறைக்கு செலுத்த வேண்டும் என்ற பரிந்துரைக் கடிதமும் அளித்தது. ஆகவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனா்.
இந்த நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் நிதி ஒதுக்கீடு பணிகள் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
கடந்த ஓராண்டாக நிதி ஒதுக்காமல் இருப்பது ஏன்?. வருகிற 13-ஆம் தேதிக்குள் கோயில் நிலம் கையப்படுத்தும் பணிக்காக ரூ. 25 கோடியை இந்து சமய அறநிலையத் துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலா், உயா்நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.