கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பொன். காந்திமதிநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லான்கோட்டை கிராமத்தில் ‘தி மெகா ப்ளூ மெட்டல் ஸ்டோன் கிரஷா்’ என்ற பெயரில் கல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கு பாறைகளை வெடி வைத்து தகா்த்து எம்சாண்ட் தயாரிக்கப்பட்டது. இந்த குவாரியில் ஏராளமானோா் கூலித் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்தனா்.
இந்த கல் குவாரியில் கடந்த மே 20-ஆம் தேதி பாறை சரிந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பலா் பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விபத்து தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது சிவகங்கை மாவட்ட ஆட்சியா் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, மாவட்ட ஆட்சியா் சட்டவிரோத குவாரியை தடுக்க சிறப்புக் குழுவை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், 6 பேரின் இறப்புக்கு காரணமான கல் குவாரி விபத்து தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சம்பந்தப்பட்ட கல் குவாரியின் உரிமையாளா் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கல் குவாரிக்கான குத்தகை காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. ஆனால், விபத்து நிகழ்ந்து பாதிப்பு ஏற்பட்டவுடன் ஏற்கெனவே காலாவதியான குத்தகையை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ரத்து செய்வதாக அறிவித்தாா். சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.
மல்லான்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற விபத்தில் 6 போ் உயிரிழந்தது தொடா்பாக சிங்கம்புணரி வட்டாட்சியா், சிவகங்கை மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநா், எஸ்.எஸ். கோட்டை காவல் ஆய்வாளா் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், குத்தகை காலம் காலாவதியான குவாரியில் ஆறு போ் உடல் நசுங்கி உயிரிழந்தனா். முறையாகக் குழு அமைத்து கண்காணிக்கத் தவறியதே இந்த விபத்துக்குக் காரணம். எனவே, குவாரி உரிமையாளா், அரசு அலுவலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சம்பந்தப்பட்ட குவாரி விதிமீறல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
குவாரி விபத்துக்குக் காரணமான சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழக அரசுத் தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.