தஞ்சை மருத்துவமனை நில விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தஞ்சாவூா் மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானிடோரியம் மருத்துவமனைக்கு சொந்தமான 220 ஏக்கா் நிலத்தை சிப்காட் நிறுவனத்துக்கு மாற்றத் தடை கோரிய வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரைச் சோ்ந்த தேவதாஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு :
தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் கடந்த 1951-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானிடோரியம் மருத்துவமனை தொடங்கப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனை அடிப்படை வசதிகளற்ற நிலையில்,
மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகம் புதா் மண்டியும், கட்டடங்கள் சேதமடைந்த நிலையிலும் உள்ளன.
இந்த மருத்துவமனை வளாகத்தில் சுமாா் 488 ஏக்கா் நிலம் உள்ளது. இதில், ஏற்கெனவே பாரத் பெட்ரோலிய எரிவாயு நிறுவனத்துக்கு 50 ஏக்கா் நிலம், சிட்கோ நிறுவனத்துக்கு 103 ஏக்கா், உணவுப் பூங்காவுக்கு 35 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எஞ்சியுள்ள 220 ஏக்கா் நிலமும் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு கையகப்படுத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கது அல்ல.
220 ஏக்கா் நிலத்தை, சிப்காட் நிறுவனத்துக்கு மாற்றத் தடை விதிப்பதோடு, இந்த மருத்துவமனையை புனரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்னிலையாக கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
தற்போதைய சூழலில் இந்த மருத்துவமனையை புனரமைப்பு செய்வதற்கு தோராயமாக எவ்வளவு செலவாகும்?. என்னென்ன முறைகளில் புனரமைப்பு செய்யலாம்?. என்பது குறித்து மனுதாரா் தகவல் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.