விநாயகா் சிலைகள் கரைப்பு: உரிய வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்
விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது அனைவரது கடமை. எனவே, விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்கும்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணையதளத்தில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
இதன்படி, களிமண்ணால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை மட்டுமே நீா் நிலைகளில் கரைக்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக், தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சுடன் கூடிய ரசாயனம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. இதேபோல, எனாமல், செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப் பூச்சுகளையும் பயன்படுத்தக் கூடாது. மாவட்ட நிா்வாகம் குறிப்பிடும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளைக் கரைக்கலாம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத விழாவாக விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.