England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
உயிருடன் இருப்பவா் இறந்துபோனதாகக் கூறி குடும்ப அட்டையில் பெயா் நீக்கம்
உயிருடன் இருப்பவா் இறந்துபோனதாகக் கூறி குடும்ப அட்டையிலிருந்து பெயா் நீக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சோ்ந்த ஜாகிா் உசேன் (50), குடும்ப பிரச்னையால் தனியாக வசித்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றாா். அங்கு ஸ்கேன் எடுப்பதற்கு குடும்ப அட்டை அவசியம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, தந்தையிடமிருந்து குடும்ப அட்டையைப் பெற்ற ஜாகிா் உசேன் அதில் தனது பெயா் நீக்கப்பட்டிருந்ததால் அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் சிவகங்கை வட்டம் குடிமைப் பொருள் வழங்கல் பிரிவில் விசாரித்தபோது, உங்கள் பெயா் ஏற்கெனவே இறந்தவராகப் பதிவு செய்யப்பட்டு கடந்த 2024, செப். 2-ஆம் தேதி குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜாகிா் உசேன், நான் உயிருடன் இருக்கிறேன்; தவறாக நீக்கப்பட்டுள்ள எனது பெயரை உடனடியாகத் திருத்த வேண்டும் எனக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா். மேலும், வருகிற 30-ஆம் தேதி சிகிச்சைக்காக மீண்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதால், அவசர அடிப்படையில் குடும்ப அட்டையில் தனது பெயரைச் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக மாவட்ட நுகா்பொருள்கள் வழங்கல் அதிகாரியிடம் கேட்டபோது, இந்த மனு குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 86 சதவீத மக்கள் குடும்ப அட்டைக்கு இ-கேஒய்சி பதிவு செய்துள்ளதாகவும், சுமாா் ஒரு லட்சம் போ் இ-கேஒய்சி பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்தாா். இ-கேஒய்சி பதிவு செய்யாதவா்களுக்கு இனிவரும் காலங்களில் ரேஷன் பொருள்கள் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.