உரத்துடன் இணைப்பொருளை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் யூரியா மற்றும் உரங்களுடன் இணைப் பொருள்களை விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
திருவாரூா் மாவட்டத்தில் யூரியா 10,077 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2,020 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,918 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,405 மெட்ரிக் டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 533 மெட்ரிக் டன் உரங்கள் அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளன.
தற்போது திருவாரூா் மாவட்டத்தில் 12,055 ஹெக்டோ் பரப்பில் கோடை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறுவை சாகுபடிக்கு தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் விவசாயிகளிடம் யூரியா மற்றும் இதர உரங்களுடன் இணைப் பொருள்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் உர விற்பனை நிலையங்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.