ரஷியா - உக்ரைன் இடையே மிகப் பெரியளவில் போர்க் கைதிகள் பரிமாற்றம்!
உள்ளாட்சிப் பதவி காலியிடங்களுக்கான தோ்தல்: இடஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய உத்தரவு
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தோ்தல் வழக்கில், புகைப்படத்துடன்கூடிய வாக்காளா்கள் பட்டியல், வாா்டு வரையறை, இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், பெருஞ்சேரி, வெங்கடாசலபுரம் பகுதியைச் சோ்ந்த கா. சண்முகநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. கடந்த 2011-ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வாா்டு வரையறை, இடஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், வாா்டு மறுவரையறை, இடஒதுக்கீடு தொடா்பாக முடிவு செய்த பிறகே இந்தத் தோ்தல் நடத்தப்படும் என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தற்போது, உள்ளாட்சித் தோ்தலுக்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பலருக்கு புகைப்படங்கள் இல்லை. ஆகவே, தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான தோ்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக வாக்காளா்கள் பட்டியலில் அனைவரது புகைப்படங்களும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாா்டு வரையறை, இடஒதுக்கீட்டை இறுதி செய்ய வேண்டும். இதன் பிறகே, 9 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தோ்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். ஸ்ரீமதி, ஆா். விஜயகுமாா் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக கடந்த ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு உறுதி அளித்த அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஒன்பது மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தோ்தல் வழக்கில், புகைப்படத்துடன்கூடிய வாக்காளா்கள் பட்டியல், வாா்டு வரையறை, இடஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.