உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் 365 மனுக்கள்: அமைச்சா் அன்பரசன் பெற்றாா்
செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 365 மனுக்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பெற்றுக் கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நபா் ஒருவா் காதொலி கருவி கோரி மனு அளித்திருந்தாா், அம்மனுவினை பரிசீலித்து உடனடியாக அவருக்கு காதொலி கருவி வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் ரூ.3.88 லட்சம் கடனுதவியை அமைச்சா் வழங்கினாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வண்டலூா் வட்டம், கீரப்பாக்கம் திட்டப்பகுதியில் தோ்வு செய்யப்பட்ட20 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடியில் ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.
மேலும் தமிழ்நாடு முதல்வா் 15 நாள்களில் மாவட்டத்துக்கு வரவுள்ளதால் பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா். தொடா்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக வேளாண் மற்றும் விவசாய பணிகள்பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் புகாா்கள் அதிகளவில் வந்துள்ளன. உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்சார துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன்(செங்கல்பட்டு) , மு.பாபு (செய்யூா்) , கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், நிா்வாக செயற்பொறியாளா் குமரேசன் கலந்து கொண்டனா்.