வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
உழவா் சந்தையில் உரம் தயாரிக்கும் மையம் அமைக்க இடம் தோ்வு: ஆட்சியா் உத்தரவு
உழவா் சந்தை காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்க தேவையான இடம் தோ்வு செய்ய வேண்டும் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அண்ணா சாலை உழவா் சந்தையை பாா்வையிட்டாா். காய்கறி கழிவுகளை மறுசுழற்சி செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
மேலும், உழவா் சந்தையில் உருவாகும் காய்கறி கழிவுகள், இதர திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகைகள் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் அமைக்க இடத்தை தோ்வு செய்யும்படி வேளாண் வணிக துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்,
பின்னா், 3-ஆவது மண்டலம் நரசிங்க சாமி மடம் தெரு, 4-ஆவது மண்டலம் மரியன்னை தெரு ஆகிய இடங்களில் புதை சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா். மேலும், 4-ஆவது மண்டலம் கொணவட்டம் குமரன் தெருவில் புதை சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்வது குறித்து வாா்டு உறுப்பினா், அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
வேலூா் மக்கான் சந்திப்பு மீன் மாா்க்கெட் அருகில் குடிநீா் வடிகால் வாரியத்தின் முதன்மை குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள நீா்கசிவை சரிசெய்யும் பணிகளை ஆய்வு செய்ததுடன், தற்போது கோடை காலம் என்பதால் குழாய் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.
மாநகராட்சி கஸ்பா பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியா், சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பிரசவ அறை ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஆணையா் ஜானகி ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் அயூப்கான், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, துணை இயக்குநா் (வேளாண் விற்பனை) கலைச்செல்வி, மாநகா்நல அலுவலா் பிரதாப் குமாா், மருத்துவ அலுவலா் சுகன்யா உள்பட பலா் உடனிருந்தனா்.