உ.பி இளம்பெண் கொலை: மொட்டைபோட்டு கங்கையில் நீராடல்; கேரளாவுக்கு தப்ப முயன்றபோது சிக்கிய காதலன்!
உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இருந்த புதரில் டிராலி பேக் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த பேக்கை பறிமுதல் செய்து திறந்து பார்த்தபோது, உள்ளே இளம் பெண் ஒருவரின் உடல் இருந்தது. உடனே அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் ஆட்டோவில் வந்து பேக்கை கொண்டு வந்து புதரில் போட்டுச் சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் அப்பெண்ணின் பெயர் அனன்யா என்று தெரியவந்தது. அவர் லக்னோவைச் சேர்ந்தவர் என்றும், அவர் அங்குள்ள விஷால் என்பவரை காதலித்து வந்ததும் தெரிய வந்தது. பெற்றோர் கட்டாயப்படுத்தி அனன்யாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் சில மாதங்களில் தனது கணவனிடமிருந்து பிரிந்து லக்னோவிற்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். அதோடு அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

வீட்டிற்கு அவரது காதலன் விஷால் அடிக்கடி வந்து சென்றார். வழக்கம்போல் அனன்யாவை விஷால் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தார். இருவரும் வீட்டில் சந்தித்தபோது அவர்களுக்குள் ஏதோ ஒரு முக்கிய பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அனன்யாவை விஷால் சப்பாத்தி சுடும் பாத்திரத்தால் ஓங்கி அடித்துக் கொலைசெய்தார். பின்னர் அனன்யாவின் உடலை டிராலி பேக்கில் அடைத்து ஆட்டோவில் எடுத்துச் சென்று அருகில் உள்ள ஜான்பூரில் போட்டது தெரியவந்தது. விஷால் ஜான்பூரில் உடலை போட்டுவிட்டு மொட்டை போட்டுக்கொண்டு கங்கையில் நீராடிவிட்டு கேரளாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்தார். அதற்குள் அவரை போலீஸார் ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.