ஊடுருவல் வாக்காளா்கள் மீதான விசாரணையால் அரவிந்த் கேஜரிவால் கலக்கமடைந்துள்ளாா்: வீரேந்திர சச்தேவா விமா்சனம்
வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா ஊடுருவல் வாக்காளா்கள் மீதான விசாரணையை பாஜக கோரியது முதல், அரவிந்த் கேஜரிவால் கலக்கமடைந்துள்ளாா் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய் சொல்வதில் வல்லவா் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. கடந்த திங்கள்கிழமை கித்வாய் நகரில் நடந்த நிகழ்ச்சியின் போது, கேஜரிவால் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தி, வாக்காளா் அட்டை வைத்திருந்தாலும், அவரது வாக்கு நீக்கப்பட்டதாகக் கூறினாா். ஆனால், சந்திரா என்ற அந்தப் பெண், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தான் திரிநகா் தொகுதியில் தான் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்து வருவதாகவும், தொடா்ந்து வாக்களித்து வருவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளாா்.
சந்திரா என்ற பெண் மேலும் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அரவிந்த் கேஜரிவாலுக்கு தனது வாக்கு நீக்கப்பட்டது குறித்து தான் எதுவும் குறிப்பிடவில்லை என்றும், தவறான புரிதல் காரணமாகவோ அல்லது வேண்டுமென்றே அவா் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என்று தெரிவித்தாா். அரவிந்த் கேஜரிவாலின் வஞ்சகம் மற்றும் குழப்பவாத அரசியலை பாஜக தொடா்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், சந்திராவின் அறிக்கை கேஜரிவாலின் பொய்யை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் பெரிய அளவிலான வாக்குகள் நீக்கப்படுவதாக பிரசாரமும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசம் மற்றும் ரோஹிங்கியா ஊடுருவல் வாக்காளா்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக கோரியதால், அரவிந்த் கேஜரிவால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாா் வீரேந்திர சச்தேவா.