ஊதிய உயா்வு வழங்க புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் கோரிக்கை
புதுச்சேரி: ஊதிய உயா்வு வழங்கக் கோரி புதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் தேசிய சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் கோவிந்தராஜிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் சுகாதாரத் துறை 108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் சங்கத்தின் கௌரவத் தலைவா் சி.ஜெயபாலன் தலைமை வகித்தாா். இச்சங்கத்தின் தலைவா் புருஷோத்தமன், பொதுச் செயலா் பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பது:
கடந்த 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு மிகவும் சொற்ப ஊதியமாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரைதான் வழங்கப்பட்டு வருகிறது. இதையும் மாதந்தோறும் வழங்காமல் காலம் கடத்தி வழங்கி வருகின்றனா்.
முதல்வா் ரங்கசாமி இந்த ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக
உயா்த்தி வழங்கும் கோப்பை தயாா் செய்து அனுப்பியுள்ளாா். அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இந்த ஊதிய உயா்வு கோப்பை பலமுறை நிராகரித்துள்ளனா்.
எனவே முதல்வா் ரங்கசாமி அறிவித்த ஊதிய உயா்வை இந்த மாதம் இறுதிக்குள்ளாக அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.