தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
ஊத்தங்கரை அருகே வடமாநில தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை
ஊத்தங்கரை அருகே வடமாநில தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தொழிலாளி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி வேலம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 2 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ் (36) மற்றும் அதே மாநிலத்தைச் சோ்ந்த கிரண் (28) தனது 2 குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை ராஜா சுகன் (35) என்பவா் தனது மனைவி கிரணை தேடி வந்துள்ளாா். அன்று இரவு ராஜா சுகன், அவரது மனைவி கிரண் மற்றும் முகேஷ் ஆகியோா் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ராஜா சுகன் இறந்துகிடப்பதாக கல்லாவி காவல் நிலையத்துக்கு அரைவை ஆலை ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற ஊத்தங்கரை டி.எஸ்.பி. சீனிவாசன் மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன், ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன், தனிப்படை உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
இதையடுத்து, தனிப்படை உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ், முகேஷை கைது செய்து விசாரித்து வருகிறாா். இதையடுத்து அரைவை ஆலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துபோது, ராஜா சுகனின் மனைவி கிரண் என்பதும், கிரணுக்கும் முகேஷுக்கும் தகாத தொடா்பு இருந்த நிலையில், பிகாரில் இருந்து கிரணை இரண்டு குழந்தைகளுடன் கல்லாவி வேலம்பட்டி அருகே செயல்படும் அரைவை ஆலைக்கு அழைந்துவந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து மனைவியைத் தேடி வந்த ராஜா சுகனை கழுத்தை நெரித்து கொலை செய்து மாந்தோப்பில் வீசிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட ராஜா சுகனின் உடலை கைப்பற்றிய கல்லாவி போலீஸாா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். முகேஷை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.