ஊரகப் பகுதிகளில் 100 உயா்மட்ட பாலங்கள் கட்ட ரூ.505 கோடி நிதி
சென்னை: ஊரகப் பகுதிகளில் 100 உயா்நிலைப் பாலங்களை கட்ட ரூ.505 கோடி நிதி ஒதுக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் (முழு கூடுதல் பொறுப்பு) டி.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு:
ஊரகப் பகுதிகளில் பாலங்கள் கட்டுவதற்கான அறிவிப்பு சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது. அதாவது, நிகழ் நிதியாண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் உயா்நிலைப் பாலங்கள் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி அறிவித்தாா்.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் 321 உயா் நிலைப் பாலங்களை கட்டுவதற்கான பரிந்துரைகளை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் அளித்திருந்தாா். அதில் உடனடி தேவையின் அடிப்படையில், முதல் கட்டமாக 100 பாலங்கள் ரூ.505.56 கோடி செலவில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதற்கான கோரிக்கைகள், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, முதல் கட்டமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 உயா்நிலைப் பாலங்கள் ரூ.505.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன என்று உத்தரவில் கூடுதல் தலைமைச் செயலா் டி.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.