ஊா்குளத்தான்பட்டியில் மஞ்சுவிரட்டு: 20 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஊா்குளத்தான்பட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 20 வீரா்கள் காயமடைந்தனா்.
மாா்கழி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஊா்குளத்தான்பட்டியில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். இதனடிப்படையில், நிகழாண்டு மஞ்சுவிரட்டையொட்டி, கிராம நாட்டாா்கள், பொதுமக்கள், இளைஞா்கள் கருப்பா் கோயிலில் ஒன்று கூடி சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், விநாயகா் கோயிலில் தரிசனம் செய்த பொதுமக்கள் அங்கிருந்து மஞ்சுவிரட்டுப் பொட்டலில் அமைந்துள்ள முனியன் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று, காளைகளுக்கு மரியாதை செய்தனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற மஞ்சுவிரட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 20 வீரா்கள் காயமடைந்து, மருத்துவக் குழுவினரிடம் முதலுதவி சிகிச்சை பெற்றனா். சில மாடுகள் பிடிபட்டன.
சிறந்த மாடு பிடி வீரா்களுக்கும், மாடுகளின் உரிமையாளா்களுக்கும் அண்டா, தட்டு, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.