எங்கள் மொட்டை மாடி அரட்டைகளை அர்த்தமுள்ளதாக்கிய விகடன்! - ரசனையின் வழிகாட்டி | #நானும்விகடன்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
விகடன் 1980களின் பிற்பகுதியில் எனக்கு அறிமுகம். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் விகடனில் சினிமா விமர்சனம் படிக்கத் தொடங்கினேன். மற்றவர்கள் திரைப்படத்தைப் பார்த்து விட்டு வந்து பேசும் போது நான் ஆனந்த விகடனில் குறிப்பிட்ட திரைப்படம் குறித்து வந்த விமர்சனத்தின் வரிகளை எடுத்துக்கூறுவேன். சக மாணவர்களிடம் அது குறித்து எதிர்வினை இருக்காது.
காக்கிச்சட்டை தொடங்கி கமல் ரசிகனாக மாறியிருந்த எனக்கு மற்ற நடிகர்கள் பற்றி வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பர்களிடம், கமலின் நடிப்பு குறித்து பேச ஆனந்த விகடனில் வருகின்ற விமர்சன வாக்கியங்கள் கைகொடுக்கும். ஆண்டுக்கொரு முறை விடுமுறை நாளில் என் உறவினர்களுடன் எம் குடும்பங்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று ஒரு சில நாள்கள் தங்கி மகிழ்ந்திருப்போம்.

இரவு நேரத்தில் மொட்டை மாடியில் அப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் குறித்து சிறிய விவாதம் நடக்கும். நாளை அனைவரும் சேர்ந்து எந்தத் திரைப்படத்திற்குச் செல்லலாம் என்ற கேள்வி வரும் போது விகடனின் விமர்சனத்தைத் துணைக்கழைத்துக் கொண்டு விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கும் கமல்ஹாசனின் திரைப்படத்திற்குப் போகலாம் என முன்மொழிவேன்.
திரைக்கு வந்த ஒரு தமிழ்த்திரைப்படம் எப்படிப்பட்ட படம் என்பதை அடையாளம் காட்டுவதே அந்நாளில் விகடனின் விமர்சனம் தான். நாளிதழ்களில் வெளிவரும் திரைப்படம் ஆனந்த விகடனில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களை பின்னணியில் வைத்து பெருமை பேசிக்கொள்ளும் காலம் அக்காலம்.
1989 ஆம் ஆண்டில் குருவான கே. பாக்யராஜ் நடித்த என் ரத்தத்தின் ரத்தமே திரைப்படமும் அவரின் சீடனான இரா. பார்த்திபன் இயக்கியிருந்த புதிய பாதையும் வெளியாகியிருந்த தருணம் ஒன்றில் இரண்டு திரைப்படங்களுக்கும் ஒரே விகடன் இதழில் விமர்சனம் வெளியாகியிருந்தது.
சீடனின் திரைப்படமான புதிய பாதையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய விகடன் குருவின் திரைப்படத்தை (கே. பாக்கியராஜ் இயக்கத்தில் தொடங்கி பின்னர் கே. விஜயன் இயக்கத்தில் முடிக்கப்பட்டது என நினைக்கிறேன்) சற்று கீழாகவே விமர்சித்திருந்தது.

அபூர்வ சகோதரர்கள்(1989) தொடங்கி குருதிப்புனல் (1995) வரை விகடனில் கமல்ஹாசனின் திரைப்படங்களுக்கு ஆஹா! ஓஹோ! விமர்சனம் தான். திரைப்படத்தைப் பார்க்கும் முன்னரோ அல்லது பார்த்த பின்னரோ திரைப்படங்கள் குறித்த விமர்சனம் என் ரசனையோடு ஒத்துப்போவதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.
கமல்ஹாசனை மற்ற நடிகர்களை விட மேலான நடிகர் என நான் கூறுவதற்கான ஆதாரங்கள் ஆனந்த விகடனின் பாராட்டு வாசகங்களே. கமல்ஹாசனின் பேசும் படம் (1987), குணா (1991), மகாநதி (1994) ஆகிய இரு திரைப்படங்களுக்கு மிகச்சிறந்த பாராட்டினை விகடனின் விமர்சனம் வழங்கியிருந்ததாக நினைவு.
இப்போதும் கூட, ஏதேனும் ஒரு திரைப்படம் பற்றிய உரையாடல்கள் வரும் போது அத்திரைப்படம் குறித்து நான் தேடுவது விகடனின் விமர்சனத்தைத் தான். 2015 ஆம் ஆண்டு விகடனில் காக்கா முட்டை திரைப்படம் குறித்து வெளிவந்திருந்த விமர்சனத்தை நான் முகநூலில் முதன் முதலில் என் கணக்கினைத் தொடங்கிய காலத்தில் பகிர்ந்து அத்திரைப்படம் குறித்து சிலாகித்திருந்தேன்.
நடுத்தரக் குடும்பங்களில் அந்தக் காலத்து தீபாவளிச் செலவில் விகடனின் தீபாவளி மலர் வாங்குவதற்கான செலவும் இருக்கும். தீபாவளியை ஒட்டிய நகைச்சுவைத் துணுக்குகளில் முதலிடம் விகடனுக்குத் தான். அதற்கு முன்னதாகவே விகடன் இதழ் விற்பனையாளரிடம் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.
ஜுனியர் விகடனில் மதன் அவர்கள் எழுதிய “வந்தார்கள் வென்றார்கள்“, சுஜாதா அவர்கள் எழுதிய “தலைமைச் செயலகம்” ஆகியவை தொடர்ந்து வாசித்து வந்தவை. பின்னர் இராஜு முருகன் எழுதிய “வட்டியும் முதலும்”, கவிஞர் நா. முத்துக்குமார் எழுதிய “அணிலாடும் முன்றில்” ஆகியவை விரும்பி வாசித்தவை. படிப்பு, வேலை தேடும் படலம் என்று பல காலம் விகடனுடன் தொடர்பில் இல்லாமல் இருந்த காலங்களும் இருந்தன. அவையெல்லாம் ஒரு வாசகனாக பேரிழப்பு தான்.

இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களிலும் குற்றங்கள், குறைகளைச் சுட்டிக்காட்டி விகடனில் வெளிவரும் கட்டுரைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 2015 ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பில் தாமதம் ஏற்பட்ட போது அன்றைய ஆளுங்கட்சியைச்சாடி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த கட்டுரை தமிழகத்தில் பெரும் பேசுபொருளானது. இன்றும் அடிப்டை நியாயத்திற்குப் பொருந்தாத, மக்களைப் பாதிப்புக்குள்ளாக்குகின்ற எந்த அரசு நடவடிக்கையாயினும் விகடன் தன் எழுத்தாயுதத்தால் அரசைச் சாடுவதில் முதலாவதாகவும் வலிமையானதாகவும் இருக்கிறது.
அதே போல் கேலிச்சித்திரங்களிலும் விகடனின் பங்களிப்பு சிறப்பு. இந்தியாவின் நிதியமைச்சராக மன்மோகன் சிங் பொறுப்பேற்று தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுத்த போது விகடன் வெளியிட்டிருந்த கேலிச்சித்திரம் இன்னும் என் மனதில் நிழலாடுகிறது. அந்தக் கேலிச்சித்திரத்தின் பொருள் இந்தச் சீர்திருத்தம் இந்தியாவிற்கு உண்மையில் வசந்த காலத்தைத் தருமா? என்ற ஏக்கத்தைச் செய்தியாக்கியிருந்தது. ஆளும் அரசு எந்தக் கட்சியைச் சார்ந்ததாய் இருப்பினும் விகடன் தன் பணியைத் தொடரட்டும்.
விகடனுடனான எனது உறவின் முத்தாய்ப்பாய் “மை விகடன்” பகுதியில் எனது ஐந்து படைப்புகள் வெளியாகியுள்ளன. எதார்த்த இயக்குநர் இராம் அவர்களின் படைப்பான “பறந்து போ” திரைப்படத்தின் வெளியீட்டினையொட்டி விகடன் நடத்திய “உறவின் கடிதம்” கட்டுரைப் போட்டியில் எனது இரு கடிதக் கட்டுரைகள் வெளியாகின. மேலும், இயக்குநர் ராம் அவர்களுடன் “பறந்து போ” திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்க்கவும் உரையாடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. விகடனுடனான எனது வாசிப்பனுபவம் இன்னும் தொடரும்.
மகாலிங்கம் இரெத்தினவேலு,
அவனியாபுரம், மதுரை-12

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!