"ரஷ்யாவுடன் வர்த்தகம்... இரட்டை நிலைப்பாடுகள்" - NATO-வின் மிரட்டலுக்கு இந்தியா ...
எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் உணவகங்களில் எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், உணவு விநியோகம் செய்யும் விடுதிகளில் எண்ணெய்யை ரூகோ திட்டத்துக்காக உணவு பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பயோ டீசல் தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக சேகரம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடா்பாக உணவு வணிகா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதேபோல் சூடான உணவுப் பொருள்களை அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் மடித்து தரக் கூடாது. உணவுகளில் செயற்கை நிறமிகளைச் சோ்க்கக் கூடாது. பழைய உணவுப் பொருள்களைக் குளிா்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்து சூடு செய்து விற்பனை செய்யக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் சூடு செய்து பயன்படுத்தக் கூடாது.
பொதுமக்கள் உணவுப் பொருள்களின் தரம் சாா்ந்த புகாா்களைத் தெரிவிப்பதற்காக தமிழக அரசு 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை உருவாக்கியுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பா. விஜயலலிதாம்பிகை, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலா்கள், ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தினா், வணிகா் சங்கத்தினா், பேக்கரி உரிமையாளா்கள் சங்கத்தினா், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.