எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்
புது தில்லி: எண்ணெய் வயல்கள் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளா்ச்சி) திருத்த மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியை நிா்வகிக்கும் தற்போதைய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்த மசோதா, கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா எரிசக்தி பாதுகாப்புக்கு ஊக்கமளிப்பதுடன், வளமான இந்தியாவுக்கு பங்களிக்கும் என்று பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.
விமான போக்குவரத்துத் துறையில் முதலீடுகளை ஈா்த்து எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், 90 ஆண்டுகள் பழைமையான விமான சட்டத்துக்குப் பதிலாக, பாரதிய வாயுயான் விதேயக் 2024 மசோதா கடந்த ஆகஸ்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவை மாநிலங்களவையில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் கிஞ்சராபூ ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.