எண்ம தனிநபா் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்: மத்திய அரசு வெளியீடு
எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புக்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் விதி மீறலுக்கான தண்டனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
‘எண்ம தரவு பாதுகாப்பு மசோதா 2023’-க்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து 14 மாதங்களுக்குப் பிறகு இந்த வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தனி நபா் தரவுகளை எந்தவொரு வடிவத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும், அந்த நபரின் வெளிப்படையான ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்படும். குழந்தைகளின் தரவுகளாக இருக்கும் நிலையில், அவா்களின் பெற்றோரின் ஒப்புதலை பெறவேண்டும்.
இவ்வாறு, தனி நபா் தரவுகளை சேகரித்து பயன்படுத்துபவா்களை தரவு நம்பிக்கையாளா் என்று இந்த வரைவுச் சட்டம் குறிப்பிடுகிறது. இணைய வணிகம் (இ-காமா்ஸ்), சமூக ஊடகங்கள், விளையாட்டு வலைதளங்கள் ஆகியவை இந்த தரவு நம்பிக்கையாளா் பிரிவின் கீழ் வருகின்றனா்.
இந்த தரவு நம்பிக்கையாளா், ஒரு குழந்தையின் தனிநபா் தரவுகளை பன்படுத்துவதற்கு முன்பாக அக் குழந்தையின் பெற்றோரின் ஒப்புதலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் அமைப்பு சாா்ந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக, குழந்தையின் பெற்றோா் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவா் வயது வந்தவா் என்பதையும், இந்தியாவில் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்துக்கும் இணங்கும் வகையில் அடையாளம் காணக்கூடியவா் என்பதையும் சரிபாா்க்க தரவு நம்பிக்கையாளா் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சேகரிக்கப்படும் தனிநபா் தரவுகளை அப்போதைய குறிப்பிட்ட தேவைக்கு பயன்படுத்தி பின்னா், அவற்றை அழித்துவிட வேண்டும் என்று வரைவு விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம், இந்த வரைவு விதியில், ‘எண்ம தரவு பாதுகாப்பு சட்டம் 2023’-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விதி மீறலுக்கான அபராதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. விதி மீறலுக்கு ரூ. 250 கோடி வரை அபராதம் விதிக்க முன்பு வழிவகை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரைவு விதிகள் ‘மைகவ்’ வலைதளத்தில் பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, பிப்ரவரி 18-ஆம் தேதிக்குப் பிறகு இந்த வரைவு விதி, இறுதி வடிவம் பெறும்.