இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
எனது சொந்தம் நீ - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நாள் முழுவதும் உழைத்துக் களைத்த சூரியன் ஓய்வு எடுக்க எத்தனிக்கும் நேரம். பரந்து விரிந்த கடலின் மறு கரையைக் காணத் துடிக்கும் தொடு வானத்தின் எல்லையில் நிழல் ஓவியம் போல் படகுகளின் ஊர்வலம்.
கரைசேரத் துடிக்கும் அலைகளில் துள்ளிக் குதித்து ஆடும் குழந்தைகளின் குதூகலக் கூச்சல்.
தம்மை சுற்றிலும் இருக்கும் ஜனக்கூட்டத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கும் காதலர்கள். ஓய்வு தேடி வந்த கடற்கரையிலும் ஓய்வின்றி பேசும் மனைவிகள்.
அவர்கள் குரலுக்குச் செவி சாய்ப்பதாய் நடித்துக் கொண்டிருக்கும் கணவர்கள்.
இறைவன் மட்டுமே அறிந்த எதிர்காலம் எங்களுக்கும் தெரியும் என்று மார்தட்டிக் கொள்ளும் ஜோசியக்காரர்கள். கடந்து செல்லும் பூவிற்கும் பெண்ணின் கூடையிலிருந்து கடற்கரைக் காற்றையும் மீறிக் கொண்டு மணக்கும் மல்லிகைப் பந்து. ஒரு விடுமுறை நாளின் இனிய பொன் மாலைப் பொழுது அது.
கரை தொட ஓடிவரும் அலைகள் நடுவில் நிற்கும் பாறைகளில் முட்டிச் சிதறுவதை பார்த்துக்கொண்டு இருந்தவனுக்குள் அவளைப் பற்றிய எண்ணங்கள், அவளுடன் பேசி கழித்த பொழுதுகளின் நினைவுகள் அலை அலையாய் எழுந்தன.

"மா.. உனக்கு ஒரு குட்டி கவிதை சொல்லவா.."
"இப்போவே வா..?"
"உன்னோடு சேர்ந்து ரசிக்கும் பொழுது நிலவுக்கும் கடலுக்கும் அழகு அதிகம் என நான் மயங்க, உன்னை விட ஒன்றும் அழகில்லை என்று நீ உரைக்க, 'பொய்யனடா நீ' என்று நான் விலக, 'கண்டு கொண்டாயா' என்று நீ சிரிக்க, நம்மிடையே பிறக்கும் சின்ன சின்ன சண்டைகளில்தான் உயிப்புடன் வாழ்கிறது நம் நட்பு .."
"கிளாசிக்.. குட்டிம்மா..."
"சும்மா ஓட்டாதே.. போடா .."
"சே சே.. நிஜமாதான் சொல்றேன்..."
என்றோ எப்போதோ அவளோடு பேசிக் சிரித்த நினைவுகள் கடல் அலைகளை மிஞ்சிய சீற்றத்தோடு நினைவுகளில் மோதின ..
"என்னோடு பேசிக்கிட்டே இருக்கிறயேடி. போரடிக்கலையா உனக்கு.."
"இல்லையே.." விளையாட்டாய் தலை சாய்த்து சிரிப்பாள்.
"எங்க இருந்து இவ்ளோ விஷயத்தைக் கண்டுபிடிப்ப..?"
"அதுவா.. உன்னோட பேசணும்னு முடிவு பண்ணிட்டா, எதுவுமே யோசிக்க மாட்டேன். மனசுக்குள்ள என்ன தோணுதோ அதை நேரா சொல்லிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்.."
இதே ரீதியில் எத்தனை உரையாடல்கள்!!
"வாய் வலிக்காதாடி உனக்கு.."
"வலிக்காதே.." கவிதையாய் தலை சாய்த்து சிரிப்பாள்.
"பைத்தியம் தாண்டிப் பிடிச்சிருக்கு உனக்கு .."
அவளிடம் கோபப்படுவது போல் நடிக்க முயற்சித்து இறுதியில் முடியாமல் அவனும் சிரித்து விடுவான்.
கல்லூரியில் நடந்தது, பயணத்தில் பார்த்தது, வீட்டில் தம்பியுடன் சண்டையிட்டது என்று அவளிடம் மட்டும் விஷயங்களுக்குப் பஞ்சமே இருக்காது. அத்தனையையும் அவனிடம் கொட்டி கவிழ்த்தால் மட்டுமே அவள் மனம் நிம்மதி அடையும்.
அவனது உயிரோடு கலந்து உறவாடியவள் அவள். அத்தனையும் சொன்னவள் பிரிந்து விடுவேன் என்றும் சொல்லி இருக்கலாமோ என்று அவ்வப்போது தோன்றும் அவனுக்கு. அவள் தன்னை மறுக்க மாட்டாள் என்று சர்வ நிச்சயமாக நம்பினான்.
நெருங்கிய உறவினர் வீட்டில் ஏதோ மணவிழா என்று விடுமுறையில் சென்றவள் இரண்டு மூன்று மாதங்களாக அங்கேயே தங்கி விட்டாள்.
என்ன காரணமோ தெரியவில்லை அவனது தொலைபேசி அழைப்புகளையும் அவள் ஏற்கவில்லை. அவள் இல்லாத ஊர் அவனுக்குக் கருப்பும் வெள்ளையுமாகத் தெரிந்தது. வண்ணங்கள் அத்தனையையும் தன்னோடு வாரிக் கொண்டு சென்றுவிட்டாள் . ராட்சசி ..
தனக்குள் சிரித்துக் கொண்டான். இந்த காதல் என்ற ஒன்று வந்து விட்டால் கல்லுக்கும் கூட கவிதை வரும் போலும். கல்லே கவி பாடும் என்றால் நான் பாட மாட்டேனா? அவனுக்குள் சிரிப்பு குமிழியிட்டது.

திடீரென மறைந்தது போலவே ஒரு நாள் திடீரென வந்து நின்றாள். அவளது வழக்கமான துள்ளலும் துடிப்பும் காணாமலே போய்விட்டிருந்தது.
'ஏன்டாமா ஒரு மாதிரி இருக்க"
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே..நல்லா தான் இருக்கேன்.."
"இல்லையே.. ஏதோ குறையுதே.."
"ப்ச் ..ஏதாவது சும்மா உளறிக்கிட்டே இருக்காதே.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் நல்லாதான் இருக்கேன்.."
பட்டு கத்தரித்தார் போல் பேச்சை முடித்துக் கொண்டு நகர்ந்து விட்டாள். என்னவாயிற்று இவளுக்கு என்ற குழப்பத்திலேயே நாட்கள் கடந்தன. அவள் இருக்கும் இடத்தில் அலை அலையாய் பரவி இருக்கும் உற்சாகம் காணாமலே போய் விட்டிருந்தது.
எப்போது பார்த்தாலும் எதையோ தொலைத்தது போல் தொலைதூரத் தொடுவானத்தில் தேடிக் கொண்டிருந்தாள். எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் கண்கள் சதா நீரில் மிதந்து கொண்டிருந்தன. எதைத் தொலைத்தாள். எதைத் தேடுகிறாள்? யாருக்கும் எதுவும் புரியவில்லை.
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..", ஒரு நாள் அவளிடம் கேட்டபோது ஒரு நொடி அதிர்ந்து விழித்தவள் மறுநொடி, "அது எப்படி முடியும் ?? லூசாடா நீ?" என்று நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டாள் .
அவன் காதுகளில் விழுந்தது உண்மைதானா என்று அவனால் நம்பவே முடியவில்லை. அன்று பிரிந்தவள்தான். அவன் மட்டும் கொஞ்சம் யோசித்து இருந்தால் அந்த பிரிவை அடியோடு தவிர்த்து இருக்கலாம். அவளது மறுப்பு தந்த அதிர்ச்சியில் இருந்தவனுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
வீட்டில் சம்மதிப்பார்களா என்று கலங்குகிறாளோ?
"நான் வேணும்னா உங்க அம்மா கிட்ட பேசட்டுமா?"
"இன்னொரு தடவை இப்படி ஏதாச்சும் சொல்லிட்டு வந்தா என்னை உயிரோடயே பார்க்க முடியாது. ஏதோ இப்போ நடமாடிட்டு இருக்கேன். அதுவும் இல்லாம கண் காணாம போயிருவேன்.. என்னைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விட மாட்டியா?" முகத்தில் அடித்தது போல ஒருநாள் அவள் சொல்லிய பின் அவன் செய்வதறியாது திகைத்து நின்றான்.
திரும்பிய திசைகள் எல்லாம் கதவுகள் மூடப்பட்டது போல் உணர்ந்தவன் அவள் தன்னோடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை நன்றாக இருந்தால் போதும் என்ற நம்பிக்கையில் விலகி வந்து விட்டான்.
நாட்கள் வாரங்கள் ஆகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்கள் ஆகி ,இன்றோடு பல வருடங்களும் கடந்து விட்டன. அவளைப் பார்க்கவோ, பேசவோ அவன் முயற்சிக்கவே இல்லை.
அவள் எப்படி இருக்கிறாளோ என்று அவ்வப்போது மனம் குறுகுறுக்கும். ஆனால் எங்கே தன்னை மறுபடியும் பார்ப்பது அவளது வாழ்வைச் சலனப்படுத்துமோ என்று அஞ்சியவன், 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று மனதோடு பாடிக் கொண்டு அமைதியாக இருந்து விட்டான் .
அவன் மட்டும் கொஞ்சம் யோசித்து இருந்தால், அவனறிந்த அவள் அப்படிக் கிடையாதே என்று கொஞ்சம் சுதாரித்து இருந்தால் அவர்களது வாழ்வே திசை மாறி இருக்கும். இன்று யோசித்து ஆவதென்ன.. அவன் அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

இத்தனை நாள் இல்லாமல் திடீரென்று அவளிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அறியாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தவுடன் முதலில் அதை எடுக்க வேண்டுமா என்று யோசித்தான். பிறகு யார்தான் என்று பார்ப்போமே என்று ஆர்வத்தில் தொலைபேசியை எடுத்தவன்,
"ஹலோ.. யாருங்க வேணும்" என்றான்.
எதிர்முனை ஒரு நொடி மௌனம் சாதித்தது, "ஹலோ.. ஹலோ.. நான் பேசுறது கேக்குதா?"
"மா.. நான்தான் பேசுறேன்.." ஒரு நொடி அவன் காலடியில் இருந்து பூமி நழுவியதைப் போல் உணர்ந்தான்.
இது அவள் குரல் அல்லவா.. எத்தனை வருடங்கள் ஆனாலும் அவள் குரல் அவனுக்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகள் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கின்றன என்று அவன் உணர்ந்த நொடி அது..
"நீதானா? நீயே தானா? எப்படி இருக்க? எங்க இருக்க? இவ்வளவு நாள் எங்கேதான் போன?", படபடவென்று கேள்விகளால் அவளைத் துளைத்தான். ஒரு நொடி மவுனமாக இருந்தவள், "உன்னை நேரில் பாக்கணுமே. எப்ப பார்க்கலாம்னு நீயே சொல்லு" என்றாள் .
"இன்னைக்கே கூட பார்க்கலாம். எங்க பாக்கலாம்? எங்க வர்ற? இல்ல.. உன்னோட அட்ரஸ் சொல்லு நானே வரேன்.." படபடத்தான்.
"இல்ல.. நானே வரேன்.. இடம் மட்டும் சொல்லு.."
"இன்னைக்குச் சாயந்தரம் பார்ப்போமா.."
"இன்னிக்கு வேண்டாம்.. நாளைக்குச் சாயந்தரம் 6 மணிக்குக் கண்ணகி சிலை கிட்ட வந்துருவியா?"
"கண்டிப்பா வரேன்.. நல்லா இருக்கியா? இவ்வளவு நாள் ஏன் பேசல? உன் வீட்டுக்காரர் என்ன செய்றாரு? எத்தனைப் பிள்ளைங்க? இவ்வளவு நாள் என்கூட பேசணும்னு தோணவே இல்லையா?" , ஆதங்கத்துடன் ஒலித்தது அவன் குரல்.
"அதான் நேர்ல பார்க்க போறோமே. அப்ப கேக்கறதுக்கு கொஞ்சம் கேள்விகளை மிச்சம் வச்சுக்கோ.." வழக்கத்தை மீறி அமைதியாக ஒலித்தது அவள் குரல். குரலின் இறுதியில் கொஞ்சம் கண்ணீர் கலந்திருந்தது..
"ராட்சசி.. ராட்சசி.. எத்தனை வருஷம் ஆச்சு.. இன்னமும் எதையோ மூடிமறைப்பதைப் போலவே பேசுகிறாளே. வரட்டும் நாளைக்கு.." என்று இப்பொழுதே அவனுக்குள் பரிதவிப்பின் சிதறல்கள்.
எனக்கிருக்கும் துடிப்பும் தவிப்பும் கொஞ்சமாவது அவளுக்கும் இருக்குமா? இருந்திருந்தால் இதனை அமைதியாகப் பேச முடியுமா. அவனுக்குள் வினாக்களின் ஊர்வலம் .
அவள் சொன்ன நேரத்துக்கு 30 நிமிடம் முன்னதாகவே வந்து விட்டான். இங்கே தானே காத்திருக்கச் சொன்னாள். இத்தனை வயதுக்கு மேல் இதென்ன இருபதுகளில் இருப்பது போல, அவனுக்கே அவனைப் பார்க்க சிரிப்பு வந்தது .
அவனருகில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது. அவளே தான் .. சன்னக் ஜரிகை கரை இட்ட காட்டன் புடவையில் அன்று பார்த்த முகம் மாறாமல், லேசான சதை பிடிப்புடன் அவளுக்கே உரிய வேக நடையுடன் வந்தவள் அவனருகில் வந்ததும் ஒருநொடி அவளை மீறிய பரவசத்துடன் கண்ணில் நீர் திரளப் பார்த்தவள், வினாடியில் சுதாரித்து இயல்பான பார்வைக்கு மாறினாள்.
அவளையே இமைக்காமல் பார்த்தவன், அவளது முகத்தில் தெரிந்த அத்தனை உணர்ச்சி மாற்றங்களையும் அவதானித்தபடி நின்றிருந்தான் .
அவனை ஏறிட்டுப் பார்த்தவள் , "மா.. நல்லா இருக்கியா.. ஆளே மாறிட்ட..." என்று புன்னகைக்க முயன்றாள் .
மெதுவாகப் புன்னகைத்தவன், "நீ எப்படி இருக்க? வீட்டுல எல்லாரும் நல்ல இருக்காங்களா? உன் வீட்டுக்காரர் வரலியா.. எத்தனை பிள்ளைங்க .." என்றான்.
அவளை எப்போதும் போல குட்டிம்மா என்று அழைக்கத் துடித்தான்.
"எல்லாரும் நல்லா இருக்காங்க .. உன் வீட்டுல கூட்டிட்டு வரலியா" என்றவள், "சரி வா.. அங்க உக்கார்ந்து பேசலாம்" என்றபடி நடந்தாள்.
அவளையே பார்த்தபடி நடந்தவன், ஒன்றும் பேசாமல் அவள் எதிரில் அமர்ந்தான் .
"இவ்வளோ வருஷத்துல ஒரு தடவை கூட என் நினைப்பு வரலியா" ஆதங்கத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டான்.
அடக்க முயன்றும் அடங்காமல் விழி நீர் வழிய, "மறந்து போயிருப்பேன்னு நினைக்கிறியா" என்றவள், சுதாரித்து, "வேற பேசலாம்.. இத்தனை நாள் கழிச்சு பார்க்கிறோம். பேச வேற விஷயமே இல்லையா.." என்று புன்னகைத்தாள் .
"எங்க வேலை பாக்கற? வீட்டுல என்ன பண்ணறாங்க? உனக்கு எத்தனை பசங்க?"
அவளையே இமைக்காமல் பார்த்தவன், "இப்போ தான் இதெல்லாம் கேக்கணும்னு தோணுச்சா ?" என்றான் .
"ரஞ்சன் ... ஏன் இப்டி பேசற..."
"வேற எப்படி பேச சொல்லற? இன்னும் என்னை 'மா ' னு கூப்பிடறத மறக்கல .. ஆனா என் கிட்ட மூடி மறைச்சு பேச மட்டும் உன்னால முடியுதா? இதுல இந்தம்மா கிட்ட பட்டும் பாடாமலும் நானும் பேசணுமாம். ஒரு தடவை உன்னோட பேச்சுக்கு மதிப்பு குடுத்து ஏதும் கேக்காம விலகி போனது போதும் குட்டிம்மா.. இனிமேலாவது கொஞ்சம் உடைச்சு பேசலாமா." ஆதங்கத்துடன் வெடித்தான் .
"மா.. அதான் எல்லாரும் நல்லா இருக்காங்கனு சொன்னே. அப்புறம் என்ன .."
"இது சரியான பதில் இல்ல. ஒரு தடவை என்னோட உள்ளுணர்வு சொன்னதை நான் கேட்கல. உன்னை இழந்துட்டு இத்தனை வருஷம் கஷ்டப்படுறேன். இனிமேயும் நான் ஏமாற தயார் இல்ல"
"மா... மா என்ன பேசுற.. என்ன ஆச்சு உனக்கு.."
"ஒன்னும் ஆகல. இன்னுமும் ஏமாற நான் தயார் இல்லைன்னு சொல்றேன்.. புரியுதா"
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்,
"இனிமேலும் உன்கிட்ட மறைக்கிறதுல எந்த அர்த்தமும் இருக்கிறதா எனக்குத் தெரியல. அன்னைக்கு உன்னை நான் வேண்டாம்னு சொல்லிட்டு போனது பொய்தான். உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதான் உன்னை மறுத்துட்டு போனேன்.
என் சொந்தக்காரங்க வீட்டில கல்யாணம்னு ஊருக்குப் போனவ மூணு மாசம் காணாமல் போயிட்டேனே, என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா? குடும்பமா எல்லாரும் வெளில போயிருந்தப்ப ஒரு விபத்துல மாட்டிக்கிட்டோம். மத்தவங்களுக்கு எல்லாம் சின்ன அடிதான். எனக்கு ஒரு இரும்பு கம்பி என்னோட அடி வயித்துல இடிச்சதனால என்னோட கர்ப்பப்பையை எடுக்க வேண்டியதா போச்சு.
நான் இல்லைனா ஒரு நல்ல பொண்ணா பாத்து நீ கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைச்சுதான் உன்னை நான் விட்டுட்டு போனேன்..
உன்னை விட்டு பிரிஞ்சு பிறகு, கடைசி செமஸ்டர் கரஸ்பாண்டன்ஸ்ல முடிச்சேன். சிட்டி பேங்க்ல வேலைக்குச் சேர்ந்தேன். அடிஷனலா சில கோர்ஸஸ் எல்லாம் முடிச்சேன். மேலும் சில பேங்க் எக்ஸாம் எல்லாம் எழுதினதுனால மேனேஜர் ஆனேன். இப்போ சிட்டி பேங்க்ல டைரக்டர் போஸ்ட் கிடைச்சிருக்கு. கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு அப்புறம் இப்போதுதான் சென்னைக்கு வந்து இருக்கேன்.

நீ இந்த ஊர்லதான் இருக்கேன்னு எனக்கு தெரியும். எத்தனையோ வருஷம் என் மனச அடக்கி வச்சு வாழ்ந்த எனக்கு நீ இருக்கற ஊருக்கு வந்ததிலிருந்து உன்ன பாக்காம இருக்க முடியல. அதனாலதான் உனக்கு போன் பண்ணினேன்.
உன்னோட குடும்பம் உன் குழந்தைகள் எல்லாத்தையும் பாத்துட்டு மௌனமா திரும்பிடலாம்னுதான் நினைச்சேன். உன் முகத்தைப் பார்த்து என்னால ரொம்ப நேரத்துக்குப் பொய் சொல்ல முடியல.
இப்பவாவது சொல்லு. உன்னோட மனைவி என்ன பண்றாங்க? உனக்கு எத்தனை பிள்ளைங்க? நீ எங்க ஒர்க் பண்ற? எப்படி இருக்க?" கண்களில் நீர் வழிய பேசி முடித்தவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்,
"பைத்தியமா டீ நீ? உன்னைத் தொலைச்சிட்டு நான் பட்ட நரக வேதனையை விட இது பெருசாடீ? கல்யாணத்தோட அர்த்தம் குழந்தைதானா? எனக்குத் குழந்தைகள் பிடிக்கும்தான். ஆனா உன்னை விட வேற எது எனக்கு முக்கியமா இருந்திருக்கும் .. எல்லாத்தையும் என்கிட்ட சொல்லற உனக்கு இத மட்டும் மறைக்க எப்படி முடிஞ்சது ..
உன்னால் எனக்கொரு குழந்தை பெத்து குடுக்க முடியலைனா என்ன? நீயே எனக்குக் குழந்தை தானேடீ. இத எப்படி நீ புரிஞ்சிக்காம போன? இன்னொரு விஷயம் சொல்லட்டுமா நான் கல்யாணமே பண்ணிக்கல. கற்பனையிலேயே ஒரு வாழ்க்கை நீ மட்டும்தான் வாழ்ந்து இருப்பியா? நான் வாழ்ந்திருக்க மாட்டேனா? என்னால இன்னொரு பொண்ண எப்படி நேசிக்க முடியும்? என் வாழ்க்கையில் நீ மட்டும்தான் குட்டிம்மா.. நீ மட்டுமே தான்.." ஆதங்கத்துடன் கொதித்தான் .

"ரஞ்சன்..நான்..உன்னோட நல்லதுக்காகதான் .."
"உன் தலை.. நீ இல்லாத வாழ்க்கைல என்னடி நல்லது எனக்கு இருக்க முடியும்... அசமஞ்சம்..."
அவளுடைய பழைய ரஞ்சன் திரும்பிக் கிடைப்பதை உணர்ந்தவள், அவனுடன் விரல்களைப் பிணைத்தபடி புன்னகையுடன், "நீ உன்னோட போன் நம்பரை மாற்றாமல் இருந்தது ஒரு நம்ப முடியாத ஆச்சர்யம் தான்" என்றாள் .
"அந்த நம்பரை எப்படி என்னால மாற்ற முடியும்? உனக்கு ஞாபகம் இருக்கா? நீயும் நானும் சேர்ந்து வாங்கின சிம் அது. 25 வருஷம் ஆச்சு. அதை எப்படி என்னால மாற்ற முடியும் ? ம்ம்.. லூசு ?? "
ஆனந்தமாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் மெதுவாய் புன்னகைத்தாள் .
"என்னடி சிரிக்கிற?" அவனுக்குள்ளும் பழைய உற்சாகம் திரும்பியது.
"ஆமா சிரிக்கிறாங்க.. எத்தனை வருஷம் சிரிப்பை மறந்து வாழ்ந்ததற்கு இப்பவாவது சிரிக்கிறேனே.. அது பொறுக்கலையா?" விளையாட்டாய் முறைத்தாள் .
கலங்கிய கண்களுடன் புன்னகைத்த உதடுகளுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் .
"மா.. உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் சொல்லட்டுமா? "
"இன்னுமாடி? சொல்லு .."
"அத சொல்ல முடியாது. அறிமுகப்படுத்தி வைக்கிறேன்", என்றவள் யாருக்கோ போன் செய்தாள் .
"இங்கே தான்.. கண்ணகி சிலையிலிருந்து உள்ளுக்குள்ள நேரா நடந்து வா "என்றவள் அவனைப் பார்த்து மர்மமாய் புன்னகைத்தாள் .
சில நிமிடங்களில் அவளை அம்மா என்று அழைத்தபடி ஒரு வாலிபன் அங்கே வந்தான். ஆச்சரியமாய் அவளைத் திரும்பி பார்த்தவன் கண்களில் கேள்வியுடன் நோக்கினான்.
மறுபடியும் புன்னகைத்தவள், "ஆமா.. இவன் என்னோட பையன்.. அர்த்தமே இல்லாம முடிஞ்சு போய் இருக்கிற வேண்டிய என்னோட வாழ்க்கைக்கு ஆதாரமா வந்தவன் இவன்.." என்றாள் .
"அதெல்லாம் இல்ல சார்.. அம்மா அதிகமா சொல்றாங்க.. பத்தோடு பதினொன்னா அனாதையா வாழ்ந்திருக்க வேண்டிய எனக்கு அன்பை அள்ளி அள்ளி கொடுத்தவங்க எங்க அம்மா .. ஆமா சார்.. நான் அவங்களோட தத்து பையன். என்னோட 2 வயசுல அம்மா தத்து எடுத்தாங்க ..ஐ ஆம் Dr.பிரிய ரஞ்சன்" என்றான் அவன்.
"குட்டிம்மா?" என்றவன், கண்களை நீர் வழிய அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான் ..
ஆதூரமாய் அவனைப் பார்த்தவன். "சார் இல்ல.. அப்பான்னு சொல்லணும்.." என்றான் புன்னகையோடு, தாயும் தந்தையுமாய் மகனுடன் கை கோர்த்து நின்றவர்களை வானம் சில பன்னீர்த் துளிகளைத் தூவி வாழ்த்தியது .
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.