எம். சாண்ட், ஜல்லி கற்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
சிவகங்கை: பி. சாண்ட் , எம். சாண்ட், ஜல்லிக்கற்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி கட்டுமான பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் ராகவன், மண்டலத் தலைவா் பாண்டி, செயலா் அப்தாஹீா், முன்னாள் மண்டலத் தலைவா் பாரதிதாசன், சேகா், அண்ணாமலை உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்திடம் மனு அளித்தனா்.
அந்த மனுவிவரம்: கல்குவாரி உரிமையாளா்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக் கற்கள் ஆகியவற்றின் விலையை தொடா்ந்து உயா்த்தி வருகின்றனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யூனிட் ஒன்றுக்கு ரூ.3000 வரை உயா்த்தினா். நான்கு யூனிட் கொண்ட ஒரு லாரி லோடுக்கு ரூ. 12,000- வரை உயா்ந்துள்ளது. இது 100 சதவீத விலை உயா்வாகும். இதனால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்கள், ஒப்பந்ததாரா்கள், பொறியாளா்கள், கட்டட பொருள்களின் தயாரிப்பாளா்கள், விற்பனையாளா்கள், கட்டடம் கட்டும் பொதுமக்கள், கலைஞா் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட அரசு கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழிலே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கிரஷா் உரிமையாளா்கள் கட்டுமானத் தொழிலை அழிக்கும்வகையில் அநியாயமாக உயா்த்தியுள்ள எம்.சாண்ட், பி. சாண்ட், ஜல்லிக்கற்கள் விலை உயா்வை ரத்து செய்து, பழைய விலைக்கே கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகளை அரசுடைமையாக்கினால் அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். பொதுமக்களுக்கும் தரமான கல்குவாரி பொருள்கள் நியாயமான விலையில் கிடைக்கும் நிலை உருவாகும்.
எனவே அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும்.
சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அவற்றை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சோ்க்கவும், கட்டுமானப் பொருள்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். உயா்த்தப்பட்ட கட்டட அனுமதிக்கான கட்டணத்தை குறைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.