பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு
எல்ஐசி அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
பழனியில் எல்ஐசி அதிகாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பழனியை அடுத்த ஆயக்குடி குறிஞ்சி நகரில் வசிப்பவா் ராமமூா்த்தி (50). பழனி எல்ஐசி அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய இவா், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மாற்றலானாா். இவா் ஆயக்குடியில், மாணவா்கள் அரசுப் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளுவதற்காக இலவசப் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறாா். இதனால் இவா் வாரம்தோறும் பழனி வந்து சென்றுள்ளாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் அங்கிருந்த பொருள்களைத் திருடிச் சென்றனா். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை வியாழக்கிழமை பாா்த்த அக்கம்பக்கத்தினா் ராமமூா்த்திக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் தலைமையிலான ஆயக்குடி காவல் நிலைய போலீஸாா் ஆய்வு செய்தனா். தகவலறிந்த ராமமூா்த்தியும் பிற்பகலில் வீட்டுக்கு வந்தாா்.
போலீஸாரின் விசாரணையில் வீட்டின் ஓா் அறையிலிருந்த 3 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் திருடப்பட்டதும், மற்றோா் அறையில் இருந்த 20 பவுன் நகையும் பணமும் திருடா்கள் கண்ணில் படாததால் தப்பியதும் தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.