எழுதும் நிலா- மார்கரெட் அட்வுட்; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 23
‘கண்ணில் ஒரு கொக்கியைப் போல்
நீ என்னுள் பொருந்துகிறாய்
ஒரு மீனின் கொக்கி
ஒரு திறந்த கண்’
‘You fit into me’ என்ற கனடியக் கவிஞர் மார்கரெட் அட்வுட்டின் குறுங்கவிதை. கண்ணிலொரு தூசு விழுந்தாலே தாங்கமுடியாது; ஆனால் கொக்கியைக் கண்ணில் நுழைத்தால் ஏற்படும் வலியைப் போல் நீ என்னில் இருக்கிறாய், திறந்திருக்கும் கண்ணிற்குள் சிக்கிய கொக்கியாக உன்னுடைய காதல் என்னை வலி மிகுந்ததாக, விட்டுச் செல்லமுடியாததாக என் மனத்தின் அமைதியைக் குலைக்கிறது. கொக்கியாகும் கேள்விகளால் சூழ்ந்துள்ள வாழ்வில் அதற்குள் ஏன் இன்னும் இருக்கிறாய் என்ற உபரியான கேள்வியும் அடங்கியிருக்கிறது.

அட்வுட்டின் கண்களில் சிக்கிக்கொண்ட கொக்கி, காதலாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. அதிகாரமோ ஆட்சியோ அன்போ உறவோ ஏதோவொன்று தன்னுள் சிக்கிக்கொண்ட வலி, வேதனையை, துயரத்தைச் சொல்லும் குறுங்கவிதை. தனக்கு நடந்தது யாருக்கும் நடக்கலாம் என்று நெருக்கத்தை எளிய வரிகள் உண்டாக்கினாலும் உளவியல் ரீதியான பாதிப்பைவும், சிக்கலான மன உணர்வுகளையும் காட்டுகிறது.
காதல் உன்னை நேசிக்கும் அதே நேரத்தில்
உன்னைச் சித்திரவதைச் செய்யக்கூடும்
காதல் உன்னைச் சோளக் கதிர்க்கட்டுகளைப் போல
தன்னுள் சேகரிக்கும்
வெற்றுடல் தெரிய அடித்துத் துவைக்கும்
உமிகளிலிருந்து உன்னைப் பிரித்தெடுக்கும்
வெளுக்கும்வரை அரைத்தெடுக்கும்
பணியும்வரை பிசைந்தெடுக்கும்

அன்பு அழைக்கும் போது, அதன் பாதை எவ்வளவு கடினமான இருந்தாலும் தாங்கிச் செல்ல வேண்டும். அது சுகமானது அல்ல; சோதனைகளைத் தரும் அன்பின் குரல் உங்களது கனவுகளை நொறுக்கக்கூடும். எதற்கும் கட்டுப்பட்டதல்ல, அதுவே வழி நடத்தும், அதுவே உடைக்கும் அதுவே சீரமைக்கும். யாரேனும் அன்புக்குரியவராக இருந்தால், அன்பே அவரைத் தேர்வுசெய்யும். உண்மையான அன்பு, உன்னை மாற்றும் முன்பே உன் உள்ளத்தைத் திறக்கும். அன்பு தனக்காகவே வாழும். அன்பிற்குத் தேவை அன்பு மட்டுமே என்பது கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசனம்.
மிருதுவான விழித்திரையில் சிக்கியக் கொக்கி தரும் வலியைப் போல் ஏதோ ஒன்றை மனக்கொக்கியில் சிக்க வைத்தல், கட்டுப்படுத்தி வைத்திருத்தல், ஏதோவொன்று நமக்குள் எப்போது ஒட்டிக்கொண்டு அமைதியைக் குலைத்துக்கொண்டு நம்மோடு பயணித்துக்கொண்டிருப்பதைப் போலப் பொருந்தாத வாழ்வைத் தீரா வலியுடன் ஏக்கங்களுடன் பலரும் கடந்து செல்கிறோம். அட்வுட்டின் வரிகள் உறவுகளின் இருண்ட அகவலியோடு புறவலியும். ஆண்,பெண் மனவுறவுகளையும், அதற்குள் பெண்கள் மட்டுமே அடிபணிய வேண்டிய அதிகாரங்களைச் சுட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
மார்கரெட் அட்வுட் ஒரு கனடியக் கவிஞர், எழுத்தாளர். ஐம்பது நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ளார். அதில் பதினேழு நாவல்கள் அடங்கும். மிகச்சிறந்த நாவலாசிரியராகப் பிரபலமானவர்.
சிறுவயதிலிருந்து புராணங்களின் மீது அதீதப் பற்றினால் அவரது கவிதைகளில் புராணங்களும் விசித்திரக் கதைகளும் நிரம்புகின்றன. அவற்றின் அறிவாலித்தானமும், நகைச்சுவையும் பரவலாகப் பேசப்பட்டன. பெரும்பாலும் கவிதைகள் மனிதத் தன்மை, சமூகக் கட்டமைப்புகள் இயற்கை மற்றும் உலக நடப்பியல் குறித்த சிக்கலான கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதில் பிரபலமாகின. அவர் கனடியாவின் மிகவும் முக்கியமான இலக்கியக்குரல்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

The Circle Game என்பது அட்வுட்டின் முதல் கவிதைத் தொகுப்பு அவரைக் கவிதையுலகில் அறிமுகப்படுத்தியது. கனடாவின் இயற்கையைப் பேசுகிறது. நிலப்பரப்புகள், ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள், பருவநிலை மாற்றங்கள் போன்றவற்றை உளவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. இயற்கை அவரது கவிதைகளில் உணர்வுகளையும். அரசியல் சூழலையும், உளவியல் பிரச்சனையையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அட்வுட்டின் கவிதை நூலில் அரசியல் கவிதைகளுக்கும் இடமுண்டு. பெண்ணியவாதம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள், நவீன சமூகவியல், காதலின் தோல்விகள் போன்ற பிரச்சினைகளை முன்வைக்கின்றன. அடிப்படையில் சமூக ஒழுக்கங்களையும், அதிகார அமைப்புகளையும், சீரமைக்கப்பட்ட சமூகங்களின் சவால்களையும் விமர்சனம் செய்கிறார்.
காதல் ஒரு தொழில் அல்ல
அது மென்மையானது அல்லது
வேறுவிதமானது
காமம் என்பது
வலியுடன் துவாரங்களை
மிருதுவாக நிரப்பும்
பல் மருத்துவமும் அல்ல
நீ என்னுடைய மருத்துவரும் அல்ல
நீ அதற்கான சிகிச்சையும் அல்ல
எவருக்கும் அந்த உரிமையில்லை
நீயும் என்னைப்போல் வெறும் சகப்பயணி

இந்தக் கவிதை, “இருக்கு / இல்லை”, வழக்கமான பார்வைகளை எதிர்க்கிறது. காதலை ஒரு கடமை, சிகிச்சை அல்லது தீர்வாகக் காணும் சமூக நோக்கத்தை உற்று நோக்குகிறது. காதல் என்பது தனிநபரின் சுய விருப்பத்தையும் உணர்வுகளையும் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அனுமதியின்றி நிகழும் காதலின் மீது எழும் கோபத்தையும் அதனால் ஏற்படும் வலியையும், போலியான நேசத்தைவிட நேர்மையான உணர்வுகளே மேலானவை என்பதையும் எடுத்துரைக்கிறது.
இது சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டியதில்லை
இது நோய்க்கு எதிரானதும் அல்ல
ஆனால் உங்களுக்கு எதிரானது
என்பதைப் புரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை
அதைக் கழுவவோ காயப்படுத்தவோ தேவையில்லை,
திரும்பத் திரும்பச் சொல்கிறேன்
அதை உயிர்ப்புடன் இருக்க அனுமதியுங்கள்
தன்னுடைய நிலைப்பாட்டை நேரடியாகவும் தாக்கத்துடன் வெளிப்படுத்துகிறது. இது உருவகங்களிலோ அலங்காரங்களிலோ அடங்கவில்லை. பெண்கள் எதிர்நோக்கும் சமூகக் கட்டுப்பாடுகள், குறிப்பாக அன்பின் பெயரில் விதிக்கப்படும் நெறிமுறைகள் மீது எழும் குரலாகவும் தெரிகிறது. அன்றைய சூழலில் அன்பும் அனுமதியும் குறித்த புரிதல்களே கேள்விகளாகின்றன.
அட்வுட் எப்படித் தன்னைத்தானே பார்த்துக்கொள்கிறாரெனச் சொல்லும் ‘சுய பயணம்’ கவிதை அவரது வாழ்க்கைப் பயணத்தின் நீட்சியான உருவகமாகும். மனம் என்பது தனித்துவமான, துடிப்பான ஒரு பகுதி என்கிறது. அது சிக்கலானது ,புரிந்துகொள்வது கடினம் என்றாலும் நமது மூளை ஏராளமான எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே தெரியாத பகுதிக்குள் தானாக உள் சென்றுவிடுகிறது. மர்மமான காட்டில் தொலைந்து போவது போல் எளிதாகச் செல்கிறது. கண் தெரியாத குகைப் பகுதியில் ஒருவர் தனியாகச் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பற்றியே பேசுகிறது. படைப்புகளுக்கு உத்வேகம் பெறுவதற்காகத் தனது சொந்த மனத்திற்குள் ஊர்ந்து செல்கிறார் அட்வுட், ஆனால் அதில் தொலைந்து போகாமல் இருக்க, மிகவும் கவனமாக இருக்க எத்தனிக்கிறார், இல்லையெனில் அதற்குள் தொலைந்து போகக்கூடுமென்ற எச்சரிக்கையும் அவருக்கு இருக்கிறது.

நான் நகர்ந்து செல்லும்போது மலைகள் என்னைக் கடந்து செல்ல அனுமதிக்கிறேன், புல்வெளிகள் எல்லையற்றதாக மாறுகின்றன, மரங்கள் சுழன்று வருகின்றன, அவற்றின் வேர்களைப் பற்றிக்கொண்டு மலையின் மீதிருக்கும் சதுப்பு நிலங்களில் கால்களைப் பதித்து நடக்கிறேன். வழியில் ஒரு பாறை கரடுமுரடாகக் கிடக்கிறது, வாழ்வின் பயணம் எளிதானதல்ல தன் அகத்தை நோக்கி நடந்துசெல்வது மலையின் மீது மெதுவாக ஏறி உள்ளே சென்றுகொண்டேயிருந்தாலும் அருகில் சென்றதும் ஒன்றுமில்லாதது போலிருக்கிறது. காற்றில் வலைகள் பின்னப்பட்டு இருள் சூழ்ந்த வெற்றிடமாக இருக்கிறது என்கிறார்.
சமையலறை மேசையில் பிரகாசிக்கும் வெள்ளைநிறக் காளான்களுக்கிடையே கூர்மையான கத்தி இருப்பதைப் போல் இந்தப் பாதை கூராகச் செல்கிறது, விழுந்துவிட்ட மரக்கட்டையைப்போல் நான் நேற்றைக் கடந்து வந்துவிட்டேன், பலரும் இன்னும் இங்கிருக்கிறார்கள்.
நான் என்ன செய்தாலும்
என் தலை நிமிர்ந்திருக்கவேண்டும்
இந்தப் பாதையில் தொலைந்துபோவது
எனக்கு எளிதானது என்பது தெரியும்.
வேறெங்கும் தொலைவதை விட
இங்கேயே
என்றென்றும்!
நாம் உண்மையில் யாரென்பதை அறிந்து கொள்வது கடினமாகவும் எல்லையற்றதாகவும் இருக்கிறது. தனது வாழ்க்கைப்பாதை விழுந்து கிடக்கும் மரக்கட்டையைப்போல நனைந்துபோய்க் கிடக்கிறது. நேற்று எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நான் நேற்றைக் கடந்து வந்துவிட்டேன் என்பதை அவர் மனம் உறுதியாக நம்புகிறது.
ஹோமரின் ஒடிஸியில் வரும் கிரேக்க தெய்வமான சிர்சு மனிதனைப் பன்றியாக மாற்றுகிறது. அதை உருவகமாக வைத்துச் சிர்ஸ்/களிமண் கவிதையை எழுதியிருக்கிறார். கழுகுகளின் தலைகளைக் கொண்ட ஆண்களின்மீது எனக்கு ஆர்வமில்லை, மனிதர்களைப் பன்றிகளாக்கும் சிர்சுகள் வெறும் மெழுகுகளாகவும் இறகுகளுடன் பறக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றவர்களின் ஆடைகளைக் களைவதற்காகத் தங்களது ஆடைகளைக் கழற்றும் நீலத் தோல்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். விலங்குகளின் கடினத் தோல்கள் என் தோலைத் தொடமுடியாது. புராணங்களை நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு உண்மையான முகங்களும், கை கால்கள் இருந்தாலும் அவர்கள் தங்களை நிரூபிக்கப் பாடுபடுகிறார்கள், அதற்குப் பதிலாக அவர்கள் மரங்களாகவே இருந்துவிடலாமெனச் சாட்டையை வீசுகிறார்.
இவரது The Handmaid Tales என்ற நாவல் பிரபலமாகி பல விருதுகளைப் பெற்றது. சுருங்கிவரும் மக்கள் தொகைக்காக ஆரோக்கியமான பணிப்பெண்களை வேலைக்கு வைத்துக்கொண்டு ஆட்சியாளர்கள் குழந்தைகளைப் பெற்றுத்தரச் சொல்வதையும் அக்குழந்தைகளின் மீதான உரிமைகளையும் பேசுகின்ற கதை.

The Blind Assassin, The Testaments ஆகிய புனைவுகளுக்காக இருமுறை புக்கர் பரிசினை வென்றுள்ளார். மேலும் Cat’s Eye, Alias Grace, Oryx and Crake என்ற நான்கு நூல்களும் புக்கர் பரிசின் குறும்பட்டியலில் இடம்பெற்றது. எந்தவொரு குறிப்பிட்ட வடிவத்திற்குள்ளும் புகுந்துகொள்ளாமல் மொழியில் லகுத்தனையைக் கூட்டி பல்வேறு வடிவங்களில் எழுத்துகளைப் பகுத்துக்கொண்டு காற்றில் பறக்கும் இறகின் சாயலுடன், நீரில் துள்ளியோடும் சிறு பொன் மீனாக வாழும் அட்வுட் நம் மனத்தைக் கவர்வதில் ஆச்சரியமில்லை.
‘இது என்னுடைய புகைப்படம்’ என்ற கவிதையின் தொனி அவருக்கு மட்டுமே கேட்கும் குரலில் இருக்கிறது. சிறிது காலத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் முதலில் அது தடவப்பட்ட அச்சுபோல் தெரிகிறது, அதிலிருக்கும் மங்கிய கோடுகள், சாம்பல் நிறப் புள்ளிகளாகக் காகிதத்துடன் கலந்திருக்கின்றன. அதைக் கூர்மையாக் பார்க்கும்போது இடப்புற மூலையில ஒரு கிளை போன்ற ஒன்றைப் பார்க்கிறீர்கள், அம்மரத்தின் ஒரு பகுதியில் சிறிய சட்டம் போட்ட வீடு இருக்க வேண்டும். பின்னணியில் ஓர் ஏரி இருக்கிறது, அதன்பின் சில தாழ்வான மலைப்பகுதி, நீங்கள் நீண்ட நேரம் பார்த்தால் இறுதியில் தான் என்னைப் பார்க்க முடியும் என்ற வரிகள் நுட்பமானது. ஒருவரை மதிப்பிடும்போது அவரைச் சுற்றிய கட்டமைப்புகளோடுதான் பெரும்பாலும் பார்க்கிறோம். வெளியிலிருந்து வேடிக்கைப் பார்க்கும் மூன்றாவது மனிதரின் பார்வையில் தன்னையே பார்த்துக்கொள்கிறார்.
அட்வுட்டின் கவிதைகள் அதீத புத்திசாலித்தனத்திற்கும் உணர்வுகளின் ஆழத்திற்குமிடையே சென்று திரும்புவதும், சன்னமான குரலில் தனக்குள் பேசிக்கொள்வதுமாகத் தனது உரையாடல்களை, அனுபவங்களைக் கவிதையாக்கியிருக்கிறார் என்றே உணர்ந்துகொள்கிறேன்.
கவிதைகள் புறத்தே பயணித்தாலும், அகத்திற்குள் திரிந்தாலும் மறைமுகமாக ஒலிக்கும் கவிஞனின் குரலைக் கேட்க முடிந்தால் கவிதை நம்மை நோக்கி நெருங்கி வந்துவிடுகிறது. அதை ஒலிப்பெருக்கியில் கேட்கவேண்டியதில்லை. நல்ல கவிதை தன்னைத் தானே உணரத் தொடங்கினால் போதுமானதுதானே.
இவரது சைரன் சாங் என்ற கவிதை அதிகம் பேசப்பட்டது. புனைவையும், பெண்களின் மீதான பாரம்பரியப் புரிதலையும் உடைத்து எழுந்த பசிய குரல். சுருக்கமான வரிகளில், ‘சைரன்’ எனப்படும் புராணப் பெண்ணாக ஆண்களைக் கவர்ந்து அழுக்கும் சித்திரமாக அல்லாமல், சிக்கிக்கொண்ட ஓர் உயிராகச் சொல்கிறார்.

நான் உங்களுக்கு ரகசியத்தைச் சொல்லட்டுமா
நான் சொன்னால், இந்தப் பறவை உடையிலிருந்து
என்னை விடுவிப்பீர்களா?
இந்தத் தீவில் அமர்ந்திருப்பது பிடிக்கவில்லை
இந்தத் தீவில் பொய்த்தோற்றங்களுடன், பாவனைகளுடன் இருப்பது அழகின் மீது செலுத்திய ஆதிக்கம்.
கடைசியாக, ஐயோ
இது ஒரு சலிப்பான பாடல்
இதே சலிப்புடன் ஒவ்வொரு முறையும் ஒத்துப்போகிறேன், இந்த அழகுக்குப் பின்னாலிருக்கும் சலிப்பும் சிக்கலுமே பெண்மையின் சுகமான சாபம்.
கனடாவில் ஒட்டாவா நகரில் பிறந்த அட்வுட், டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ராட்கிளிஃப் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலேயே அவரது கவிதைகள் தொகுப்பாக வெளியாகின. நியூயார்க், டொரோண்டோ உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றியுள்ளார்.
இலக்கியத்தோடு மட்டுமல்ல இயற்கையின் மீது பற்றுகொண்டவர். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை எளிமையான, இயற்கைச் சூழலில், குறிப்பாகக் கனடாவின் ஒன்டாரியோவில் கழித்துள்ளார், அங்கு நண்பர்களுடன் நீண்ட காலமாக மின்சாரம் இல்லாத தொலைதூர வனப்பகுதியின் அறையில் வசித்து வந்துள்ளார்.
“A word after a word after a word is power.” ஒரு சொல்லுக்குப் பின் இன்னொரு சொல், அதற்குப் பின் இன்னொரு சொல் என அனைத்துமே சேர்ந்து வலிமையான சக்தியாகிறது’ என "Spelling" என்ற கவிதையில் சொல்கிறார். அவரது எழுத்துக்களும் சக்திவாய்ந்தவை, ஆனால் "இயற்கையை எனது தேவாலயமாக நினைக்கிறேன்." என்று சொல்வதோடு War is what happens when language fails –மொழி தோல்வியடையும் போது நடக்கும் நிகழ்வுதான் போர் என்கிறார்.

வயதான காலத்திலும் கூட, தனது சொந்தக் கோப்பையை எடுத்துச்சென்று தேநீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் காபி குடிப்பதில்லை; தேநீர் பிரியர், Early Grey அவருக்குப் பிடித்தமானது, எனக்கும். தற்போது 85 வயதாகியும் சுறுசுறுப்பாக இன்னும் தனது சொந்தக் கையெழுத்திலேயே எழுதுகிறார். Scribbler Moon என்ற நாவலை எதிர்கால நூலகத் திட்டத்திற்காகக் கையெழுத்துப் பிரதியாக எழுதி 2114ஆம் ஆண்டு அதனை வெளியீடு செய்யவேண்டுமென்று நார்வேயின் ஒஸ்லோவில் இந்நாவல் வைத்து பூட்டப்பட்டுள்ளது. இந்த எழுத்துகள் நூறு ஆண்டுகளுக்கு உறங்கப் போகின்றன, பின்னர் அவை விழித்தெழுந்து மீண்டும் உயிர்ப்பெறப் போகின்றன. இக்கதையோடு வரும் அவளும் நூறு ஆண்டுகள் தூங்கினாள் என்று சொல்லி எதிர்கால உலகத்திற்கான எனது பரிசு என்று சொல்லி வியக்க வைக்கிறார் அட்வுட்.
சொற்கள் மிதக்கும்!