மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, கணபதி அருகேயுள்ள மணியகாரன்பாளையத்தில் ஏடிஎம் மையத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது. அங்கு புதன்கிழமை நள்ளிரவு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள், உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவாகிவிடக்கூடாது என்பதற்காக அதில் ‘ஸ்ப்ரே’ அடித்துள்ளனா்.
பின்னா், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனா். அப்போது, மும்பையில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்ததால், அங்கிருந்து கோவையில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சரவணம்பட்டி போலீஸாா் சென்றனா். ஆனால், அதற்குள் அந்த நபா்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.