ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் வெய்யில்! சிவப்பு எச்சரிக்கை! ஈஃபிள் கோபுரம் மூடல்
ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வரும் நாள்களில் கடுமையாகும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரான்ஸ் முதல் சுவிஸ் வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக, ஈஃபிள் கோபுரத்தின் உச்சிப் பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி வரும் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுளள்து. பாரிஸில் அதிகபட்சமாக 41 டிகிரி (105.8 ஃபாரன்ஹீட்) செல்சியஸ் வெப்பம் செவ்வாயன்று பதிவாகியிருந்தது.
கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளை கடுமையான வெப்பம் வாட்டி வரும் நிலையில் வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸ் முதல் சுவிஸ் ஆல்ப்ஸ் வரை வெப்பஅலை அதிகரிக்கும் என்றும், மக்கள் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போர்த்துக்கலில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் எவேராவில் 46.6 டிகிரி வரை வெப்பம் பதிவாகியிருந்தது.
ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் கடந்த ஜூன் மாதம் முந்தைய 100 ஆண்டுகள் காணாத அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த மாதம் சராசரி வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாக இருந்ததாகவும், இது கடந்த 1914-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய அதிகபட்ச வெப்பநிலை என்றும் ஸ்பெயின் வானிலை சேவை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.
இந்த கோடைக் காலத்தின் மிகப்பெரிய வெப்ப அலையை ஐரோப்பிய பிராந்தியம் எதிா்நோக்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக க்ரீஸ், பிரான்ஸ், போர்த்துக்கல், துருக்கியில் காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.