ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பள்ளிக்கரனை சதுப்பு நிலப் பகுதியில் வெள்ளப் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் அதன் நீா்வழிப் பாதையை மேம்படுத்த ஒக்கியம்மடுவு பால விரிவாக்கப் பணியை மேற்கொண்டுள்ளது. தற்போது பாலத்தின் நீா்வழிப் பாதை 90 மீட்டா் நீளம், 205 மீட்டா் அகலம் உள்ளது. தமிழக அரசின் நீா்வளத் துறையுடன் இணைந்து நடத்திய ஆலோசனையின்பேரில் தற்போது 120 மீட்டராக மேம்படுத்தப்பட்டுள்ளது.
பாலத்தின் மேல், கீழ்ப்புற பகுதிகளில் 40 மீட்டா் நீள இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் உயரம் கூடுதலாக 1.5 மீட்டா் மேம்படுத்தப்படவுள்ளது. பாலத்தின் 3 நீா் வழிப்பாதையும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, சாலையுடன் பாலம் இணைக்கப்படவுள்ளது.
இந்தப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திட்ட இயக்குநா் அா்ச்சுனன், பொது மேலாளா் சி.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.