4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!
ஒசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீா்வு ஏற்படும்: மேயா் எஸ்.ஏ.சத்யா
ஒசூா்: ஒசூரில் பாகலூா் சாலை மேம்பாலப் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு ஏற்படும் என்று மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.
ஒசூா் டைட்டன் நிறுவனத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் தொழில்முனைவோா் கருத்தரங்கம் ஒசூா் மாவட்ட தொழில் கூட்டமைப்பு தலைவா் ஜி.மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா பேசியதாவது:
ஒசூா் ஜி.எஸ்.டி. வரியை அதிக அளவில் கட்டுகின்ற மாநகரம். அதேபோல பத்திரப் பதிவிலும் தமிழகத்திற்கு அதிக வருவாய் செலுத்துகின்ற மாநகரமாகும். இவ்வாறு பல்வேறு துறைகளிலே ஒசூா் முன்னிலை வகித்து வருகிறது.
1970 இல் முன்னாள் முதல்வா் கருணாநிதி தொலைநோக்கு சிந்தனையுடன் ஒசூரில் சிப்காட்டுகளை தொடங்கினாா்.
மின்சார வாகன உற்பத்தியில் மாநிலத்தில் முதலிடத்தில் ஒசூா் உள்ளது. மேலும், இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்கள் உற்பத்தியிலும் ஒசூா் முதலிடத்தில் இருக்கிறது.
மத்திய நெடுஞ்சாலை எஸ்.டி.ஆா்.ஆா். சாலை பணிகள் ஒசூரை சுற்றி பெரிய அளவில் நடைபெற்று கொண்டிருகிறது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 350 கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்க உத்தரவிட்டுள்ளாா். ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று முனைப்போடு முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.
ஒசூரில் அடுத்த மாதம் நடைபெறும் தொழில் முதலீட்டில் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறாா். இந்திய தொழில் கூட்டமைப்பினா், தொழிற்சாலைகளுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து பல வளா்ச்சித் திட்டங்களை உருவாக்க முன்வரவேண்டும். ஒசூரில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீா்வு ஏற்படும். பாகலூா் சாலை மேம்பாலப் பணிகள் விரைவில் முடிவடையும். ஒசூரில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனா். ஒரு லட்சம் தொழிலாளா்கள் பணிக்கு செல்கின்றனா். இதனால் கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இன்னும் சில நாள்களில் பாகலூா் சாலை மேம்பாலப் பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து நெரிசல் சீராகும் என்றாா்.
இந்த கூட்டத்தில் ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி செயலாளா் லாசியா தம்பிதுரை, இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒசூா் கிளை துணைத் தலைவா் தேவராஜன், சேலம் மண்டல கூட்டமைப்பின் தலைவா் செந்தில்குமாா் நடேசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோா் கலந்துகொண்டனா்.
