உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்த 8 வயது சிறுவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி அருகே உள்ள பாரத கோயில் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன். இவரது மனைவி ஜமுனா. இந்த தம்பதியின் மகன் கோவில் கனி (8). இவா் உடல்நலக் குறைவால் கடந்த 21-ஆம் தேதி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா் சிகிச்சையில் இருந்த அவா், சிகிச்சை பலனின்றி கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது கண்களை தானம் செய்ய அவரது பெற்றோா் முன்வந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் பிரிவு சிகிச்சை பேராசிரியா் சுதாகா் தலைமையிலான குழுவினா் கோவில்கனியின் இருகண்களையும் தானமாகப் பெற்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனா்.