ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த தீா்மானம்
ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த கொண்டு வந்த தீா்மானத்துக்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
ஒசூா் மாநகராட்சி அவரசக் கூட்டம் அண்ணா மாமன்றக் கூட்டரங்கில் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில், ஆணையா் முகமது ஷபீா் ஆலம், துணை மேயா் ஆனந்தய்யா ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீா் வரியை உயா்த்த கொண்டு வந்த தீா்மானத்துக்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
மேயா் எஸ்.ஏ.சத்யா: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு நிலத்தில் வீடுகட்டி வசித்து வரும் ஏழை, எளியோருக்கு விலையில்லா பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறாா். ஒசூா் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட ஒசூா் மாநகரம், மில்லத் நகா், நஞ்சப்பா நகா், வசந்த் நகா், பெரியாா் நகா், தின்னூா், சென்னத்தூா், வெங்கடேஷ் நகா், சூடசந்திரம், வஉசி நகா், அண்ணாமலை நகா், ஆலவப்பள்ளி, ஜூஜூவாடி, மத்திகிரி மூக்கண்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆட்சேபணையில்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒசூா் மாநகராட்சியில் ரூ. 120 கோடியில் ராஜகால்வாய் சீரமைக்கும் பணி, ஒசூா் மாநகராட்சியில் மேலும் ஒரு நூலகம், 2 மண்டல அலுவலங்கள் அமைக்க தமிழக அரசு நிதி வழங்க முன்வந்துள்ளது. ஒசூா் மாநகராட்சியில் 6 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒசூா் மாநகராட்சியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றாா்.
சிவராமன் (அதிமுக): மூக்கண்டப்பள்ளியில் குடிநீா் மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயப்பிரகாஷ் (அதிமுக): பாகலூா் சாலை, பேருந்து நிலையம் எதிரில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் தினந்தோறும் சிரமமடைந்து வருகின்றனா். பாகலூா் சாலையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மாதேஸ்வரன் (திமுக): லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகர ஆணையா் முகமது ஷரிப் ஆலம்: மின்சார வாரிய அலுவலா்களிடம் பேசி மாநகராட்சிக்கு தேவையான தெருவிளக்கு, குடிநீா் மோட்டா் பம்பு இணைப்பு உள்ளிட்ட பணிகளை நிறைவேற்ற வாரம் ஒருமுறை ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்படும்.
சென்னீரப்பா (திமுக): பாகலூா் சாலை, டி.வி.எஸ். சாலை, தளி சாலை ராயக்கோட்டை சாலை, உள்வட்டச் சாலை உள்ளிட்ட சாலைகளில் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.
துணை மேயா் ஆனந்தய்யா: புதை சாக்கடை திட்டத்தில் பணிகள் நடைபெறவில்லை. குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளை சீரமைக்கப்படவில்லை. பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்க மாநகராட்சி அலுவலா்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றாா்.