முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சாலை மறியல்: 223 போ் கைது
ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் 223 போ் கைது செய்யப்பட்டனா்.
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கே.2 அக்ரிமென்ட் மூலம் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியா்களுக்கு இபிஎஃப் பிடித்தம் செய்ய வேண்டும். பிரிவு அலுவலகங்களுக்கு ஒப்பந்த முறையில் இரண்டு போ் நியமனம் என்ற முடிவை கைவிட்டு வாரியமே ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு தினக் கூலி வழங்க வேண்டும்.
அரசு உத்தரவக்கு எதிராக நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். பத்து ஆண்டுகளாக மின்வாரியத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனல் மின் நிலையம், நீா் மின் நிலையம், மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள், பொது கட்டுமானம் ஆகியவற்றில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை தியாகராஜநகா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டத் தலைவா் நாகையன் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் ஜாா்ஜ் முத்தையா , சுந்தா், ராஜ் , முருகேசன், மந்திரமூா்த்தி, வேல்முருகன், முருகேசன், சேவியா், அந்தோணி, சிவராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் பீா் முகமது ஷா, மாநில செயற்குழு உறுப்பினா் சுவாமிதாசன் , திட்ட செயலா் கந்தசாமி, திட்ட பொருளாளா் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினா் பட்டமுத்து ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீஸாா் கைது செய்தனா்.